உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960 முதல் இயங்கி வந்தது. ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினராக உள்ளனர். வருவாய்
ஆண்டுக்கு, 10 மாதங்கள் ஆலை இயக்கப்பட்டு, 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. இங்கு சில ஆண்டுகளாக இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.நடப்பாண்டு இயக்க முடியாத அளவு இயந்திரங்கள் பழுதடைந்தன. ஆலையை நவீனப்படுத்த, 62 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சர்க்கரை ஆலை உற்பத்தி, எரிசாராய ஆலை உற்பத்தி என, ஆலைக்கு ஒதுக்கப்படும் நிதியை, ஓராண்டில் திரும்ப பெறும் வகையில், அரசுக்கு வருவாய் கிடைக்கும்.இதனால் உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். இருப்பினும், ஆறு மாதமாக அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டம்
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். நிதி ஒதுக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலதண்டபாணி கூறுகையில், ''அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி, விவசாயிகள், தொழிலாளர்கள் என பல ஆயிரம் பேர் உள்ளனர். ஆலையை நவீனப்படுத்த தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, பணியை துவக்க வேண்டும்.''அடுத்தாண்டு மார்ச்சில் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி ஒதுக்காவிட்டால், விவசாயிகளை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும்,'' என்றார்.
பதிவு கரும்பு மாற்றம்
அமராவதி சர்க்கரை ஆலையில், மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்., 1 முதல் கரும்பு அரவை துவங்கும். நடப்பாண்டு, 1,650 விவசாயிகள், 60,000 டன் கரும்பு அரவைக்கு வழங்க பதிவு செய்திருந்தனர். ஆலை பழுது காரணமாக, மோகனுார் சர்க்கரை ஆலைக்கு, 14,000 டன் கரும்பு கொண்டு செல்ல சர்க்கரை துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மீத கரும்புகளையும், அருகிலுள்ள ஆலைகளுக்கு வெட்டிக் கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் கரும்புக்குரிய தொகையை, உடனடியாக வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.