கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய திருத்தேர் கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 15ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அவிநாசி கோவிலில் கும்பாபிேஷக விழா விமரிசையாக நடந்து முடிந்துள்ளது; மண்டல அபிேஷக பூஜைகள் நடந்து வரும் நிலையில், சித்திரை தேர்த்திருவிழாவை, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தேர்த்திருவிழா, சித்திரை முதல் நாளன்று (ஏப்.,14) அதிகாலை, 3:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை, சிறப்பு மண்டப அறக்கட்டளை நடைபெறும். அதன்படி, 15ம் தேதி சூரிய, சந்திர மண்டல காட்சி; 16ல், அதிகார நந்தி, கிளி, பூதம் மற்றும் அன்னவாகன காட்சி.ஏப்., 18ல் 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு; 19ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் யானை வாகன காட்சி; 20ம் தேதி பஞ்சமூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 21ம் தேதி காலை, 8:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து, வடக்கு ரதவீதியில் நிறுத்தப்படும்; 22ம் தேதி காலை மீண்டும் வடம் பிடித்து, நிலை சேர்க்கப்படும். மறுநாள் (23ம் தேதி), கருணாம்பிகை அம்மன் தேர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர்கள் வடம் பிடித்து, தேர்வீதிகளில் வலம் வரும்.தேரோட்டத்தை தொடர்ந்து, 24ம் தேதி வண்டித்தாரை, இரவு பரிவேட்டை, 25ம் தேதி தெப்பத்தேர் உற்சவம், 26ம் தேதி ஸ்ரீநடராஜ பெருமான் தரிசனம், மாலையில் கொடியிறக்கம்; 27ம் தேதி காலை மஞ்சள் நீர் விழா, மாலையில் மயில்வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறும். திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீகருணாம்பிகை கலையரங்கில் தினமும், இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.