உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

திருப்பூர் : மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக துறை வாரியாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சொந்தமான இடங்கள், திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ரோட்டோரம் உள்ள கட்டடங்களில் முன்புற வாசல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு முன்புறம் பந்தல் மற்றும் ஷெட் போன்றவை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.வருவாய்த்துறைக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு, கால்நடைத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு, பொதுப்பணித்துறையின் நீர் வழிப்புறம்போக்கு பகுதிகளில் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கட்டடம் எழுப்பி, அவர்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் ஆண்டுக்கணக்கில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இடங்கள் இருப்பதும், அரசு அதிகாரிகள் அவற்றை திரும்ப பெற முடியாமல் தவிப்பதும், சில இடங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக உள்ளது.இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள நிலங்கள் மற்றும் அதை மீட்க எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி, நகராட்சிகள், ஒன்றிய குழு, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நில அளவை துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர். துறை வாரியாக அனைத்து பகுதிகளிலும் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள், ஆக்கிரமிப்பு இருந்தால், என்ன வகையான ஆக்கிரமிப்பு; எத்தனை காலமாக உள்ளது; ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் அளவு மற்றும் ஆக்கிரமிப்பின் நிலை; கட்டடமா அல்லது வேறு ஏதேனும் பயன்பாடா என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டது. ஒரு வார அவகாசத்துக்குள் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை