உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் பதிவுகள்; அட்மின்கள் அலர்ட்

தேர்தல் பதிவுகள்; அட்மின்கள் அலர்ட்

திருப்பூர்;கடந்த சில தேர்தல்களாக, சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மெனக்கெட்டு, வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரிக்கும் வேட்பாளருக்கு மத்தியில், பார்வையாளர்களின்,'லைக்'குகளை அள்ளும் அளவுக்கு, போஸ்டர் தயாரித்து, தகவல் தொழில்நுட்ப பிரிவினர், வாக்காளர்களை குஷியாக மாற்றிவிடுகின்றனர்.அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் இயக்கும், கட்சி சார்ந்த சமூக வலைதளக் குழுவாக இருந்தால் சரி; பொதுநல அமைப்புகள், மருத்துவ குழுவினர், பசுமை அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், மாணவர் குழுக்கள் என, பொது நோக்கத்துடன் இயங்கும் சமூக வலைதளக் குழுக்களில், இத்தகைய தேர்தல் பதிவுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.தேர்தல் காலத்தில், 'வாட்ஸ் ஆப்' பிரசாரம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், மற்றொரு கட்சி வேட்பாளர் மீது விமர்சனம் செய்யும் போது, புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு, சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு, அதை இயக்கும் 'அட்மின்'கள் பொறுப்பாக நேரிடும்.இதன் காரணமாக, லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே, பொதுநல நோக்கத்துடன் இயக்கப்படும், சமூக வலைதளக் குழுக்களில், 'அட்மின்'களின் அறிவுறுத்தல் துவங்கிவிட்டது.'தேர்தல் விதிமுறைகளின்படி, எந்தவிதமான அரசியல் கட்சிக்கு சாதகமாகவோ, பாதமாகவோ பதிவிட வேண்டாம். கட்சிகள் சார்புடைய எந்த பதிவுகளையும் எக்காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்' என, 'அட்மின்'கள் தொடர்ச்சியாக, குழு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர்.அப்படியிருந்தும், ஒரு சில கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பதிவுக்கு, எதிரணியை சேர்ந்த கட்சி பிரதிநிதிகள், கடும் ஆட்சேபனை தெரிவிக்க நேரிட்டால், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுநல அமைப்புகள் இயக்கும், சமூக வலைதளக் குழுக்களில், 'அரசியல் பதிவு வேண்டாம்' என்ற 'அட்மின்'களின் வேண்டுகோள் பதிவுகள் வைரலாகி வருகின்றன.வீண் சிக்கல்களை தவிர்க்கலாம் என்ற ரீதியாக, 'அட்மின்'கள் மட்டும், சமூக வலைதளக் குழுக்களில் பதிவிடும் வகையிலும், குழுக்களில் தற்காலிக மாற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை