உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மின் இணைப்பு முறைகேடு; அதிகாரி மீது நடவடிக்கை

 மின் இணைப்பு முறைகேடு; அதிகாரி மீது நடவடிக்கை

திருப்பூர்: ஊத்துக்குளி கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செங்கப்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந் தது. பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனு: நாச்சிபாளையம் மின் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், முறைகேடாக மின்மோட்டார் பொருத்தி, மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 20க்கும் அதிகமான முறைகேடான மின் இணைப்பு கண்டறியப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நஞ்சராயன்குளம் அருகே, விவசாய மின் இணைப்பு என்ற பெயரில் முறைகேடாக மின் இணைப்பு வழங்கியதால், மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''ஊத்துக்குளி உபகோட்டம், பெரியபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், விதிகளை மீறி வழங்கிய விவசாய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்புடைய உதவி மின் பொறியாளர் செந்தாமரை கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாச்சிபாளையம் மின் அலுவலகப் பகுதியில் நடந்த புகார் தொடர்பாக விசாரிக்கப்படும்'' என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ரூ.2500 கட்டணத்துக்கு பதில்: ரூ.16: குன்னத்துார் அருகே, பழனியப்பன் என்பவர், வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தார். பணிகள் முடிந்து, நிரந்தர வீட்டு இணைப்பாக மாற்ற விண்ணப்பித்தார். விண்ணப்பித்து, 50 நாட்களாகியும் தற்காலிக இணைப்பு, நிரந்தர இணைப்பாக மாற்றம் செய்யப்படவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால், 2,500 ரூபாய் கட்டணம் வருவதற்கு பதிலாக, வீட்டுக்கு 16,693 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட நபர்கள் குறைகேட்பில் நேற்று முறையிட்டுள்ளனர். அதிகாரிகள் விசாரித்த போது, பிரிவு அலுவலக பணியாளர்கள், 'விண்ணப்பம் தொலைந்து விட்டதால், நடவடிக்கை எடுக்க இயலவில்லை' என்று தெரிவித்தனர். விரைந்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை