திருப்பூர்:'பாலிதீன் பைகளுக்கு இனி அனுமதி இல்லை; துணிப்பை மூலம்தான் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும்' என்று சுய பிரகடனத்துடன், இடுவாய் மக்கள், சுற்றுச்சூழல் காக்க களமிறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டச் சென்ற விவகாரத்துக்கு பிறகு, இடுவாய் கிராம மக்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. 'வெளியே இருந்து வரும் குப்பையை தடுப்பது மட்டும் எங்கள் கடமை; நமது ஊராட்சியை சுகாதாரமான ஊராட்சியாக மாற்றுவோம்' என, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு களமிறங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை, மக்கள் தாங்களாகவே தடை செய்து கொள்ள நுாதன விழிப்புணர்வு பணி துவங்கியுள்ளது. துணிப்பை, கன்டெய்னர் கடைகளுக்கு வினியோகம் இளைஞர்கள், விவசாயிகள் இணைந்து, முதல்கட்டமாக மளிகை கடைகளுக்கு துணி பை வழங்கி வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர் துணிப்பை எடுத்துவர வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால், துணிப்பையை விலைக்கு வாங்கி பொருட்களை எடுத்துச்செல்ல அறிவுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் பாலிதீன் பையில் பொருட்கள் வழங்கக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று, அனைத்து கடைகளுக்கும் துணி பைகள் வழங்கப்பட்டுள்ளன. இறைச்சிக்கடைகளுக்கு மக்கும் தன்மையுள்ள, கன்டெய்னர்கள் வழங்கப்பட்டுள்ளது; நேற்று முதல், அந்த கன்டெய்னரில் இறைச்சி வழங்கப்படுகிறது. வீட்டு வாசலில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைத்து கடைகளிலும், 'இடுவாய் பகுதியில் மண் வளம் காப்போம்'; 'எங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர் இல்லை'; 'வாடிக்கையாளர் துணி பை கொண்டு வரவும்' என்று அச்சிடப்பட்ட 'ஸ்டிக்கர்'களை கடைகளில் ஒட்டியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது,ஒவ்வொரு வீட்டு வாசலில் இருந்தும் உருவாக வேண்டும் என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ளனர். --- இடுவாய் ஊராட்சியில் உள்ள கடைகளில், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி, துணிப்பையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் வினியோகித்தனர். கோவில் சீட்டு மூலம் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயில், துணிப்பை, இறைச்சி கடைக்கு கன்டெய்னர் உள்ளிட்டவை வழங்கி, இடுவாய் ஊராட்சி முழுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை விரைவுபடுத்தியுள்ளோம். மளிகை கடை, காய்கறி கடைகள் உட்பட, இனி எந்த பொருள் வாங்கினாலும், அதன்மூலம் பாலிதீன் கவர் வீட்டுக்கு வர அனுமதிக்கக்கூடாது. வீட்டில் உருவாகும், 'பேக்கிங்' பாலிதீன் கவர்களை, நாங்களே பெற்று அழிக்கவும் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, வீடுகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்தாக, மக்காத குப்பையை, மெஷினில் எரித்து அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகபட்சம், இரண்டு மாதங்களுக்குள், ஒட்டுமொத்த இடுவாய் ஊராட்சி பகுதிகளை சுகாதாரமான கிராமமாக மாற்றுவோம். - ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர், இடுவாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு.