திருப்பூர்:கூடா நட்பு கேடாய் முடியும் என்று மூத்தோர் சொன்ன வார்த்தை எவ்வளவு சரியானது என்பதை திருப்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் உறுதிப்படுத்தியது.ஐந்து பேர் நண்பர்கள்; ஒருவர் தனது வீட்டு விசேஷத்தையொட்டி, நண்பர்களுக்கு மது விருந்து வைக்க ஏற்பாடு செய்தார். ஒரு நண்பரின் உறவினர் வீடு ஒன்றை தேர்வு செய்து, நள்ளிரவு மது அருந்த ஆரம்பித்தனர்.அதிகாலை, 3:00 மணியளவில், இருவர் தங்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றனர். மீதமுள்ள மூன்று பேரும் அளவுக்கு அதிகமான போதையில் அமர்ந்து இருந்தனர். மற்றொரு நண்பர் துாங்க சென்ற நிலையில், இருவர் மட்டும் அமர்ந்து மது அருந்திய படி பேசி கொண்டிருந்தனர்.போதை தலைக்கு ஏறிய நிலையில், நண்பர், மற்றொரு நண்பனின் மனைவி குறித்து அவதுாறாக பேசி கிண்டல் செய்தார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, மனைவியை பற்றி அவதுாறு பேசிய நண்பனை கடப்பாறை, மதுபாட்டிலால் தாக்கி கொலை செய்தார். அதிகாலையில் நடந்த கொலை அன்று இரவு போலீசாருக்கு தெரிய வர விசாரணை நடத்திய போலீசார், ஆறு பேரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:ஐந்து பேரும் நீண்ட கால நண்பர்கள். கொலை செய்த வாலிபர் கடந்த சில ஆண்டுகள் முன் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இரு குழந்தைகள் உள்ளன. வாலிபருக்கு திருமணத்துக்கு முன்னதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அப்பழக்கம் மனைவிக்கு தெரியாமல் தொடர்ந்தது.இறந்த நபர், நண்பரின் மனைவியிடம் இதை தெரிவித்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற சில விஷயங்களை கூறி, நண்பனுக்கு தெரியாமல் நெருங்கி பழகினார். ஒரு கட்டத்தில், அப்பெண்ணுடன் தனிமையில் இருந்தார். இதுகுறித்து கொலை செய்த வாலிபருக்கு தெரிய வந்தது.மனைவியை மிரட்டி நண்பன் பழகி வந்தது தெரிந்தது. அவரை பழி வாங்க வாலிபர் காத்திருந்தார். அந்த நேரத்தில், மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட போது கொலை திட்டம் அரங்கேறியது. பின், கோர்ட்டில் சரணடைந்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர். தவறான பழக்கம் வழி மாறிய வாழ்க்கை
கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவருக்கும், 28 முதல் 35 வயது வரை மட்டுமே. கைது செய்யப்பட்டுள்ள தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவரை பிரிந்து, வாலிபருடன் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு, இரண்டு குழந்தைகள் ஹாஸ்டலில் படித்து வருகின்றனர்.தவறான நட்பாலும், பழக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது அந்த, நான்கு குழந்தைகளின் வாழ்க்கை. பெற்றோர், குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுடன் பேசி பழக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இளம் வயதினரும், தங்களது நட்பு வட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.