உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை விவகாரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்

 குப்பை விவகாரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்

பல்லடம்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், இடுவாய் கிராமத்தில் குப்பைகளை கொட்டி திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக, இடுவாய், சின்னக்காளிபாளையம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 7 ஏக்கர் நிலம் குறித்தும், மாநகராட்சி நிர்வாகத்தால் மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்தும், இடுவாய் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது : திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகள் கொட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்ததாகும். மாநகராட்சி பெயரில் உள்ளதாக கூறப்படும், 7 ஏக்கர் நிலம், முன்னோர்கள் கல்வி சேவைக்காக தானமாக வழங்கிய நிலமாகும். மாநகராட்சி குப்பை கொட்ட நினைக்கும் இடத்தை சுற்றியுள்ள, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் ஆகிய நான்கு ஊராட்சிகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஊராட்சிகள் முழுக்க முழுக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் சார்ந்த பகுதிகளாகும். இங்கிருந்துதான், தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, 50 சதவீதத்துக்கு மேற்பட்ட காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவை செல்கின்றன. பால் உற்பத்தியில் முக்கிய பங்கும் உள்ளது. மங்கலம் பாசன சபைக்கு உட்பட்ட, 13 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தரும் பி.ஏ.பி., வாய்க்காலும் இங்கு உள்ளது. குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு வரும் இடத்துக்கு எதிரே, மத்திய அரசின் அறிவியல் பூங்கா மற்றும் பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அருகிலேயே, குளம் குட்டைகள் ஆகியவை உள்ளன. இந்த உண்மைகளை மறைத்து, சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், பொதுமக்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.உரிய தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை