உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்

தமிழ் - வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு ஏராளம்

பல்லடம்;''தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தொல்லியல் - வரலாறு - தமிழ் இணை பிரியாதவை'' என்று கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்.பல்லடம் அரசு கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், 'வேர்களைத் தேடி' என்ற பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.தமிழகத் தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது:தொல்லியலும், வரலாறும், தமிழும் இணை பிரியாதவை. முற்காலத்தில், கொடுமணலில் தயாரிக்கப்பட்ட மணிகள் ரோமாபுரி வரை சென்றன. அன்றைய காலத்தில், பொருட்களை பெற தங்க நாணயத்தை பயன்படுத்தினர். இவ்வாறு, ரோமாபுரியில் இருந்து ஏராளமான தங்கம் தமிழகத்துக்கு வந்ததால், ரோமாபுரியின் கருவூலமே காலியானது.ஒரு காலகட்டத்தில் அரசு நடத்துவதற்கே சிரமமான சூழல் உருவானது. தமிழகத்துடன் வாணிபம் நடந்தால், ரோமாபுரி என்ற அரசே இல்லாமல் போகும் என்ற சூழல் ஏற்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைக்கும் அளவுக்கு தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மணிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016க்கு பின்பே சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக கொடுமணலும் பேசப்பட்டது.மனிதர்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிக அவசியம். ஆனால் இன்று பொழுதுபோக்கை மறந்து மனிதர்களின் சூழல் மாறிவிட்டது. தமிழ், வரலாறு பாடங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றை படிப்பதற்கு இன்று ஆட்கள் இல்லை. தமிழ்... தமிழ்... என்று பேசுவதை காட்டிலும் செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. தமிழைக் காப்பாற்றுவது உங்களின் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 'கொரியா வரை செல்லும் தமிழ் வேர்கள்' எனும் தலைப்பில் தமிழ் ஆய்வாளர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். உதவி பேராசிரியர் ஜெய்சிங் நன்றி கூறினார்.----பல்லடம் அரசுக் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசினார்.----பல்லடம் அரசுக் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், தமிழ் எழுத்துகளுடன் கூடிய நம் தேச வரைபடத்தை மாணவியர் கோலமாக வரைந்திருந்தனர்.

தாயக்கட்டையின் 2600 ஆண்டு வரலாறு

தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் பேசுகையில், '' நமது கலாசாரத்தில் விளையாட்டுப் பொருளாக இருந்தவை தாயக்கட்டைகள். யானைத்தந்தங்களால் செய்யப்பட்ட இவற்றை செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தாயக்கட்டை விளையாட்டு மூலம் கணிதம் வெளிப்பட்டது. தாயக்கட்டையும், பல்லாங்குழி ஆட்டமும் பெண்களின் கணித அறிவை மேம்படுத்ததின. ஒரு தாயக்கட்டையின் பின்னால் 2,600 ஆண்டு வரலாறு உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை