| ADDED : நவ 16, 2025 12:42 AM
காங்கயம்: காங்கயம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகம், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோட்டில், தாலுகா அலுவலக வளாகம் அமைந்துள்ளது. தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள், சார்நிலைக் கருவூலம், வேளாண் விரிவாக்க மையம், தோட்டக் கலைத்துறை அலுவலகம், இ-சேவை மற்றும் ஆதார் மையம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் இந்த வளாகத்தினுள் பல்வேறு கட்டடங்களில் செயல்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கட்டிய ஒரு பழைய கட்டடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வந்தது. சில ஆண்டுகள் முன் இதற்கென புதிய வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில், தற்போது புதிய கட்டடத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்குள்ள பழைய கட்டடத்தில் ஆதி திராவிடர் நல சிறப்பு தாசில்தார் அலுவலகம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான கட்டடம் என்பதால் மிகவும் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இதன் பிரதான சுவற்றில் 10 அடி உயரத்துக்கும் மேல் ஒரு பெரிய மரம் வேர் விட்டு வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இக்கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அருகேயுள்ள வேளாண் விரிவாக்க மையத்தின் கட்டடமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்து, பழைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.