| ADDED : ஜன 04, 2024 12:58 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது. தொற்று நோய் மற்றும் தீவிர காய்ச்சல் போன்ற நோய்கள் இந்த கொசுக்கள் மூலம் பரவுகிறது. இதனை தடுக்கும் விதமாக கொசுப்புழு ஒழிப்பு பணி, கொசு மருந்து அடிக்கும் பணி ஆகியன மேற்கொள்ளப்படுகிறது.குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புகை மருந்து அடிக்கும் வகையில், சுகாதார பிரிவு ஊழியர்கள் புகை மருந்து அடிக்கும் கருவி பயன்படுத்தி வந்தனர். இந்த கருவிகள் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில், 60 வார்டுகளிலும் 15 கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது.இது குறித்து தொடர்ந்து மாநகராட்சி கூட்டங்களின் போது, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தும், வார்டுக்கு ஒரு கருவி என்ற அடிப்படையிலாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனடிப்படையில் தற்போது, 60 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வந்துள்ள, 8 கருவிகள் நேற்று ஊழியர்களிடம் வழங்கப்பட்டது.கருவிகளின் இயக்கத்தை கமிஷனர் பவன்குமார் பார்வையிட்டார். இதில், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் பத்ம நாபன், நகர் நல அலுவலர் கவுரி சரவணன், செயற்பொறியாளர் செல்வ நாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.