திருப்பூர்;தமிழகத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள், பராமரிப்பின்றி, மோசமான நிலையில் இயக்கப்படுகின்றன. புதிய பஸ்களாக மாற்ற வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் கிலோமீட்டர் இலக்கை எட்டிய அரசு சர்வீஸ் பஸ்களுக்கு மாற்றாக, புதிய நீலநிற பி.எஸ்., 4 பஸ்கள், பி.எஸ்., 6 மஞ்சள் நிற பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வீஸ் பஸ்களில் 60 சதவீதம், புதிய பஸ்கள் என்ற நிலை வந்துவிட்டது.தமிழகத்தில் இயக்கப்படும் 18 ஆயிரம் அரசு பஸ்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை டவுன் பஸ்கள். பெரும்பாலான வழித்தடங்களில், கிழிந்த இருக்கை, ஒழுகும் மேற்கூரை, திறக்க முடியாத ஆட்டம் காணும் ஜன்னல், தரைத்தளத்தில் ஓட்டை என மோசமான நிலையில், டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. இவற்றுக்குப் பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்பது பயணியர் எதிர்பார்ப்பு.அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேன மாநில பொது செயலாளர் (ஏ.ஐ.டி.யு.சி.,) சண்முகம் கூறுகையில்,'டவுன் பஸ்கள் பலவும், 3,000 முதல், 5,000பஸ்கள் கி.மீ., இலக்கை தாண்டி இயங்குகின்றன; சில பஸ்களில் மீட்டர்கள் கூட இயங்குவதில்லை. சர்வீஸ் பஸ்களை புதிய பஸ்களாக மாற்றுவது போல், டவுன் பஸ்களையும் மாற்ற வேண்டும்'' என்றார்.
இலவச பயணம் காரணமா?
டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதனால், போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதால்தான் அப்படியே அதரப் பழசான பஸ்களே இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் பயணிகள் பலருக்கும் எழுகிறது.