உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனிதனிடம் உள்ள மேன்மையை போற்றுங்கள்

மனிதனிடம் உள்ள மேன்மையை போற்றுங்கள்

திருப்பூர்;''மனிதனிடம் இருக்கின்ற மேன்மையானவற்றை போற்ற துவங்கினால், அந்த மனிதன் மேன்மையானவாக மாறி விடுவான்,'' என்று திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசினார்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், புத்தக திருவிழா திருப்பூர் - காங்கயம் ரோடு வேலன் ஓட்டலில் நடந்து வருகிறது.நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, 'இனியவை காண்க' என்ற தலைப்பில் பேசியதாவது:ஆங்கிலத்தில் 'நெகட்டிவ்' என்ற வார்த்தைக்கு, தமிழில் எதிர்மறை என்றும், 'பாஸிட்டிவ்' என்ற வார்த்தைக்கு நேர்மறை என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. நேர்மறை என்கின்ற சொல்லுக்கு பதிலாக, நேர்முறை என்ற சொல்லை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.நாம் பிறக்கும் போது யாரும், இந்த உலகம் இனிமையானதாக இருக்கும், மகிழ்ச்சி ததும்பும். ஆனந்தம் பொங்கும் என்று உத்தரவு அளித்ததால் நாம் பிறக்கவில்லை. ஒரு உயிரியல் விபத்தாக பிறந்தோம் என்பது தான் உண்மை.இந்த உலகில், 79 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது என்பதற்காக, நாம் வாழ்க்கையை முடித்து கொள்ளவில்லை. அதில், இருக்கின்ற, 21 சதவீதம் நிலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் இந்த உலகத்தில் இருக்கின்ற மகிழ்ச்சியானவற்றை பார்த்து, அவற்றின் நிழலில் மீதி வாழ்க்கையை கழிக்க வேண்டும்.எந்த மனிதனும், நுாறு சதவீதம் நல்லவனாக இருக்க முடியாது. மிகச்சிறந்த ஞானிகளிடம் கூட சினம் என்ற குற்றத்தை நாம் பார்க்க முடியும். மனிதனிடம் குற்றங்கள் அதிகமாக இருந்தாலும் கூட, அவனிடம் உள்ள குணங்களை மட்டும் எடுத்து கொண்டு பழக வேண்டும். மனிதனிடம் இருக்கின்ற மேன்மையானவற்றை போற்ற துவங்கினால், அந்த மனிதன் மேன்மையானவாக மாறி விடுவான். நீங்கள் ஒருவரிடம் உள்ள குணங்களை போற்ற, போற்ற, அவர்கள் அந்த குணங்களை பெரிதுபடுத்த நினைப்பார்கள்.நம்மிடம் இவ்வளவு அரிய குணம் இருக்கின்றதா, நாம் ஏன் இன்னும் மகத்தானவர்களாக மாற கூடாது என்று நினைப்பார்கள். அவர்கள் மகத்தானவர்களாக மாறி விடுவார்கள்.நம்பிக்கைக்கு உரியது தான் வாழ்க்கை. மகிழ்ச்சியானது என்று நினைப்பது தான், வாழ்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே, நடப்பவை நல்லவை என நினைக்கின்ற மனிதன் சோர்வடைவதில்லை.வாழ்க்கை தாத்பர்யம்இறையன்பு பேசியதாவது:நம்முடைய வாழ்க்கையை ஒன்றை புரிந்து கொள்வது அவசியம். இந்த வாழ்க்கை நீடித்து இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. நிலையானது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால், ஒரு மிகப்பெரிய பயணத்தில் செல்லும் போது, வழியிலே பார்க்கின்ற மலர்களையும், பறவைகளையும், விலங்குகளையும் பார்த்து, அந்த நொடியில் மகிழ்ச்சி அடைகின்றோமே, அதைபோல மகிழ்ச்சி அடைவது தான் வாழ்க்கையின் தாத்பர்யம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை