உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புத்தக கண்காட்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! கலெக்டரிடம் ஹிந்து முன்னணி மனு

 புத்தக கண்காட்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும்! கலெக்டரிடம் ஹிந்து முன்னணி மனு

திருப்பூர்: 'திருப்பூரில் புத்தக கண்காட்சியை, அரசே நேரடியாக நடத்த வேண்டும்; அரசியல் கட்சியின், ஒருதலைபட்ச புத்தக நிறுவன தலையீடு கூடாது,' என, குறைகேட்பு கூட்டத்தில், ஹிந்து முன்னணி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதற்காக துறைசார்ந்த அரசு அலுவலர்களிடம் வழங்கினர். புத்தக கண்காட்சிஅரசே நடத்தட்டும் ஹிந்து முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன்: திருப்பூரில் புத்தக கண்காட்சி நடத்தும் பின்னல் புக் டிரஸ்ட் என்பது, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தது. கண்காட்சிக்கு, மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனாலும், ஸ்டால் புக்கிங்கிற்கு, தனியே பணம் வசூலிக்கின்றனர். புத்தக கண்காட்சியை காரணம் காட்டி, பல்வேறு நிறுவனங்களில் வசூல் வேட்டையும் நடத்தப்படுகிறது. இதற்கு முறையான கணக்கு காட்டப்படுவதில்லை. கருத்தரங்கம் என்கிற பெயரில், ஒருதலைபட்சமான தலைவர்கள், பேச்சாளர்களை அழைத்து, அரசியல் பேசவைக்கின்றனர். கடந்தாண்டு இதுபோன்ற நிகழ்வுகளால், பெரும் தகராறு ஏற்பட்டது. வரும் காலங்களில், திருப்பூர் புத்தக கண்காட்சி, பின்னல் புக் டிரஸ்ட்டுக்கு வழங்கப்படமாட்டாது என, அப்போதைய கலெக்டர் உறுதி அளித்தார். அதன்படி, இந்தாண்டுக்கான புத்தக கண்காட்சியை அரசே ஏற்று நடத்தவேண்டும்; பின்னல் புக் டிரஸ்ட்டுக்கு அனுமதி அளிக்க கூடாது. மீண்டும் பணிவழங்கப்படுமா? தாராபுரத்தை சேர்ந்த காளிதாஸ்: அரசு போக்குவரத்து கழகம், தாராபுரம் கிளையில், கடந்த 2007ம் ஆண்டு முதல் டிரைவராக பணிபுரிந்துவந்தேன்; 2009ல் பணி நிரந்தரம் செய்தனர். கடந்த 2016ல் வலிப்பு நோய் காரணமாக, என்னால் பணிக்கு செல்ல இயலவில்லை. தற்போது உடல்நிலை நன்றாக உள்ளதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மீண்டும் பணி வழங்க கோரி, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்களோ, எனக்கு மீண்டும் பணி வழங்க மறுக்கின்றனர். உரிய விசாரணை நடத்தி, எனக்கு மீண்டும் அரசு டிரைவர் பணி பெற்றுத்தர வேண்டும். கிரயம் செய்து தரமறுப்பது ஏன்? திருப்பூர் - காங்கயம் ரோடு, ரங்கம்பாளையம் பகுதி மக்கள்: தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொகை செலுத்தி, இரண்டரை சென்ட் நிலம் வாங்கினோம். ஏழு குடும்பத்தினர், மொத்தம் 27 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அந்த இடத்தில் வீடுகட்டி வசித்துவருகிறோம். ரியல் எஸ்டேட் உரிமையாளர்களோ, எங்கள் இடத்தை இன்னும் கிரயம் செய்து கொடுக்கவில்லை. அவர்களது பெயரிலேயே மின் இணைப்பு, தண்ணீர், வீட்டு வரி அனைத்தும் உள்ளது. கிரயம் செய்து தரக்கேட்டால், வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர். ஒவ்வொருவரிடமிருந்து பெறப்பட்ட தொகை அடிப்படையில், அவர்கள் வசிக்கும் இடத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும். எங்களை ஏமாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். பத்திரப்பதிவு செய்யதடை நீங்கப்படுமா? அவரப்பாளையம், செந்துாரன் கார்டன் பகுதி மக்கள் அளித்த மனு: பல்லடம், அவரப்பாளையத்தில், செந்துாரன் கார்டனில், 40 குடும்பத்தினர் வசிக்கிறோம். செட்டில்மென்ட், ரயத்துவாரி பட்டா, டிடிசிபி., அனுமதி பெற்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றும் வீடு கட்டி குடியிருந்துவருகிறோம்; அரசுக்கு முறையாக வரி செலுத்துகிறோம். ஹிந்து அறநிலையத்துறை, பத்திரப்பதிவு அலுவலகம் வாயிலாக, இனாம் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்து, பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனுபவ பாத்தியமும், பதிவு செய்யப்பட்ட பத்திர உரிமையும் உள்ளதால், இந்த நிலங்களுக்கு ரயத்துவாரிபட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வழங்கியுள்ள பத்திரப்பதிவு தடையை ரத்து செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிமகனுடன் 'தர்ணா' ஊத்துக்குளியை சேர்ந்த கல்பனா, 35. மாற்றுத்திறனாளியான இவர், தனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கிராம உதவியாளர் பணி வழங்க கோரி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கல்பனா கூறுகையில், ''எனது கணவர், 2021ம் ஆண்டில் இறந்துவிட்டார். நான், பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட விபத்தில், இடது கையை இழந்துவிட்டேன். மாற்றுத்திறனாளியான எனக்கு, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை கிடைத்து வருகிறது. என்னால், போதிய வருவாய் இன்றி, குழந்தையை வைத்துக்கொண்டு வாழ முடியவில்லை. எனக்கு, கிராமஉதவியாளர் வேலை வழங்கி, எனது வாழ்க்கைக்கு கைகொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை