பெருங்கேடு போக்கும் புண்ணிய தலம்: நல்லாறு கொடுத்த வரம்! 'அ விநாசி' என்றால் 'பெருங்கேடு' என்று பொருள். 'அவிநாசி' என்பதற்கு 'பெருங்கேட்டை போக்க வல்லது' என்பது பொருள். தேவாரப்பாடல் பெற்ற, 274 சிவாலயங்களில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், 205வது தேவாரத்தலம். 'காசிக்கு நிகரான தலம்' என்றும் கூறுவதுண்டு. இந்த புண்ணியத்தலம் அமைந்திருப்பது, நல்லாற்று கரையில் தான். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த, பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலும் நல்லாற்று கரையில் தான் அமைந்திருக்கிறது. இக்கோவில் கிணற்றில் உள்ள தீர்த்தம், மனநோய் போக்கும் மருந்து என்பது, பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. மேலும், திருமுருகன்பூண்டி மாதவ வினேஸ்வரர் கோவில், அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், கங்கை எழுந்தருளும் ஐதீகம் கொண்ட கருவலுார் கங்காதீஸ்வரர் கோவில் என, 1,000 ஆண்டு பழமையான சிவாலயங்கள், நல்லாற்றின் கரை மீது தான் உள்ளன. திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் உள்ள, 2,000 ஆண்டு பழமையான, சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு, முன்னொரு காலத்தில் நல்லாற்று நீர் தான் அரணாக இருந்து, கோவிலை சுற்றி ஓடி, நொய்யலில் சங்கமித்திருக்கிறது. நல்லாறு துவங்கும் கஞ்சப்பள்ளியில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமணர் கோவில், இன்றும் இருக்கிறது. திருப்பூரின் தொழில் வளர்ச்சியுடன், நல்லாறு நாகரிகம் வார்த்தெடுத்த அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பின்னி, பிணைந்திருக்கின்றன. ஆன்மிகம், விவசாயம், தொழில் என, பல்வேறு துறைகளில் அவிநாசி, பூண்டி பெற்றுள்ள வளர்ச்சி என்பது, இயற்கை அன்னை ஈந்த நல்லாறு கொடுத்த கொடை என்று சொன்னால் தகும். நல்லாற்று கரையில் 'திரிவேணி சங்கமம்' திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: 'நீரின்றி அமையாது உலகு' என்பார் வள்ளுவர். 'நீர், தாய்மொழி போன்றது' என்கிறார், கவிச்சக்ரவர்த்தி கம்பர். உலகில் பெருமைக்குரியது நீர் என்பதில் மாற்று கருத்தில்லை. கொங்கு மண்ணில் ஆன்மிகம், விவசாயம், தொழில் வளம் என மூன்றும் நிறைந்த பகுதிகளாக அவிநாசி, பூண்டி, திருப்பூர் நகரங்கள் உள்ளன. ஒரு கோவிலின் சிறப்பு என்பது தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அந்த வகையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், புனிதம் நிறைந்த காசி தீர்த்தம் இருக்கிறது; அதே நேரம், அங்குள்ள நல்லாறு தீர்த்தம், வளமை தருவதாக கருதப்படுகிறது. திருமுருகன்பூண்டி, திருமுருகசுவாமி நாதர் கோவில், திருச்செந்துார் கோவிலுக்கு நிகரான புனிதம் நிறைந்தது. அதற்கு காரணம், முருகப்பெருமான், சூரபத்மனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு, இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவிப் பூஜை செய்தார் என்பது ஐதீகம். இந்த இரு ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களில், வானம் பார்த்த விவசாய நிலங்கள் செழிப்படைந்தது, நல்லாற்று நீரால் தான். அதற்கடுத்து, நல்லாற்று படுக்கையில் உள்ள திருப்பூர், தொழில் வளத்தில் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இவ்வாறு, ஆன்மிகம், விவசாயம், தொழில் என மூன்றும் நிறைந்திருக்கும், அவிநாசி, பூண்டி, திருப்பூர் ஆகியவை, நல்லாற்று கரையில் உள்ள 'திருவேணி சங்கமம்' என்று சொல்வதில் மிகையில்லை.இவை நமக்கு உணர்த்தும் பாடம், நீரும், காற்றும் மாசுப்படக்கூடாது என்பது தான். இவையிரண்டும் மாசுபட்டால் ஒட்டுமொத்த சமூகமே மாசடையும். எனவே, நல்லாற்றை மீட்டெடுப்பதும், நன்னீர் ஓடக்கூடிய நதியாக மாற்ற வேண்டியதும் தான் எதிர்கால தலைமுறையின் வளமான வாழ்வுக்கு நாம் விட்டு செல்ல வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.