- நிருபர் குழு -அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 'ஸ்டிரைக்' காரணமாக, எவ்வித பாதிப்பும் இல்லை, வழக்கம் போல பஸ்கள் இயங்கின.அரசு போக்குவரத்துகழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு ஏற்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.வாரிசு பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன.இதில், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அ.தொ.ப., உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அடங்கிய, கோவை மண்டல கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியில் உள்ள மூன்று கிளைகளில் இருந்து இயக்கப்படும், 196 பஸ்களும் வழக்கம் போல இயக்கப்பட்டன. எல்.பி.எப்., சங்கத்தை சேர்ந்தவர்கள் பஸ்களை வழக்கம் போல இயக்கினர். பஸ் போக்குவரத்து கழக கிளைகள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி கிளை 1 மற்றும் 2 முன், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., கோவை மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றும் மொத்த தொழிலாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, பஸ் இயக்க முடியாது. சில நாட்களில் பஸ்கள் இயக்கம் குறையும். எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்,' என்றனர். வால்பாறை
வால்பாறையில் இருந்து, வெளியூர்களுக்கும், எஸ்டேட்களுக்கும், மொத்தம், 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று, அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள, பஸ் ஊழியர்கள் 207 பேரில், 25 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசு போக்குவரத்துகழக கிளை மற்றும் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. உடுமலை
அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.உடுமலையில், மொத்தமுள்ள, 94 பஸ்களில், காலையில், 64 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தொடர்ந்து ஊழியர்கள் வருகை காரணமாக, அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் காரணமாக, உடுமலையில் பாதிப்பு இல்லை. தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.உடுமலை அரசு போக்குவரத்துக்கிளையில், 650க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில், 300 பேர் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதல் நாள் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் முழுமையாக பணிக்கு வந்ததால், பாதிப்பில்லை. போராட்டம் தொடர்ந்தால், அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.