திருப்பூர்: திருப்பூர் அருகே விவித் பேஷன்ஸ் வாசுநாதனின் மணி மண்டபம் திறக்கப்பட்டது. திருப்பூர் ரைடிங் கிளப் முன்னாள் தலைவர் விவித் பேஷன் வாசுநாதனின் மணி மண்டபம் திறப்பு விழா, திருப்பூரை அடுத்த பெரியாரியபட்டி, கண்டியன் கோவில் கிராமத்தில் விவித் தோட்டத்தில் நேற்று காலை நடந்தது. பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் ஆடலரசன், கோவை சங்கர் அசோசியேட்ஸ் ரமணிசங்கர் மற்றும் வாசுநாதனின் குடும்பத்தினரும் இணைந்து மணி மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, சேவாபாரதி எக்ஸ்லான் ராமசாமி, பா.ஜ. மாநில செயலாளர் மலர்க்கொடி, வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், சக்தி சுப்ரமணியம், அலகுமலை கோவில் அறங்காவலர் சின்னு கவுண்டர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஒரு மனிதன் தான் பிறந்த பின், வாழ்ந்திருக்க கூடிய காலகட்டத்தில், எப்படி வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக, அவர் வாழ்ந்து, மறைந்த பின், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என, அனைவரும் பேசும் போது தான், அந்த மனிதர் வாழ்ந்த தாக்கம் தெரியும். அவ்வகையில், நமது வாசுநாதன், தான் வாழ்ந்த ஊரை மறக்காமல், பள்ளி, கிராமம், ஊர் மக்களுடன் ஒருவராக இருந்து, தான் படித்த பள்ளியை தத்தெடுத்து, சுற்றியுள்ள கோவில்களுக்கு நன்கொடை என, பல உதவிகளை செய்தார். அவரது பணிகளை அவரின் குடும்பத்தினர் தொடர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.