| ADDED : பிப் 22, 2024 05:31 AM
திருப்பூர்: திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள, கோட்டை மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த 19ம் தேதி, முளைப்பாலிகை, பால் குடம், தீர்த்தக் குடம் ஊர்வலமும், கம்பம் போடும் நிகழ்வும் நடந்தது.தினமும் அம்மனுக்கு பல்வேறு அவதாரங்களில் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கடந்த 20ம் தேதி, படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று பொங்கல் திருவிழா முன்னிட்டு அதிகாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் முன்புறம் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தி, தங்க கவச அலங்கார பூஜை, மகாதீபாராதனை ஆகியன நடந்தது. காலை முதல் தொடர்ந்து நடந்த வழிபாடுகளில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.கம்பத்தில் மஞ்சள் நீர் மற்றும் உப்பு காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் உருவ பொம்மைகள் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை அன்னதானமும் நடைபெறவுள்ளது.