உடுமலை;மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்துக்கு, பல முறை கணக்கெடுப்பு நடத்தியும், நிதி ஒதுக்கீடு செய்வது பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது. தற்போது 'கனவு இல்லம்' என்ற பெயரில், திட்டத்தை செயல்படுத்த மீண்டும் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசு மானிய நிதி ஒதுக்கீட்டில் கிராமப்புறங்களில், வீடு கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், பசுமை வீடுகள் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பசுமை வீடுகள் திட்டம் கைவிடப்பட்டது; மாற்றாக, கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில், 2.76 லட்ச ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.திட்டத்துக்காக, ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், பயனாளிகளை தேர்வு செய்ய மறுகணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டு, 2021ம் ஆண்டின் இறுதியில், பணிகள் துவங்கியது.ஒன்றிய அதிகாரிகள் சார்பில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், மறு கணக்கெடுப்பு நடத்தி, விபரங்கள், 2022ம் ஆண்டில், பிரத்யேக மொபைல் செயலியில் பதிவு செய்யப்பட்டது.இப்பணிகள் நிறைவு பெற்றதும், பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டு, வீடு கட்டும் பணிகளை துவக்கலாம் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும், திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்நிலையில், தற்போது, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை செயல்படுத்த, அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்காக, ஊராட்சி தலைவர், ஒன்றிய உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய மேற்பார்வையாளர், ஊராட்சி வார்டு உறுப்பினரை உள்ளடக்கிய குழுவை அமைத்து, குடிமங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்களில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினர் பயனாளிகளின் தற்போதைய தகுதியை கண்டறிந்து உறுதி செய்ய வேண்டும்.திட்டத்தில், 'ஒரு வீட்டுக்கான அலகுத்தொகை 3.50 லட்ச ரூபாயாகும். இத்தொகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு, 90 மனித சக்தி நாட்களும், கழிப்பிடத்துக்கு, 10 மனித சக்தி நாட்களும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கழிப்பிடம் கட்ட, சிறப்பு திட்டத்தில், 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, திட்டத்துக்கான மானியத்தொகையை உயர்த்தினாலும், பயனாளிகள் தேர்வுக்கான விதிமுறைகளால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.குடிசையில் ஒரு பகுதி ஆர்.சி.சி., ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட், உலோக தகடால் ஆன கூரைகளுக்கு மேல், வேயப்பட்டுள்ள குடிசை வீடுகள் தகுதியற்றவை என தெரிவித்துள்ளனர். மழைக்காலத்தில், தங்கள் பாதுகாப்புக்காக, இத்தகைய சீட்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.திட்டத்துக்காக மீண்டும் அவற்றை அகற்றும் போது, பல மடங்கு செலவாகும் என விண்ணப்பித்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், மூன்று ஆண்டுகளாக, கணக்கெடுப்பு, விபரம் பதிவேற்றம் என திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது இழுபறியாக உள்ளது. இம்முறையாவது அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.