| ADDED : ஏப் 27, 2024 02:30 AM
திருச்சி,:திருச்சி புத்துார் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி., அலுவலர் ஆனந்தன், 59. கடந்த, 9ம் தேதி இவரது மொபைல்போனுக்கு, ஒரு நபர் தொடர்பு கொண்டு, டிராய் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின், உங்களின் கனரா வங்கி கணக்கில் இருந்து, 37 கோடி ரூபாய் மதிப்பில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அதுகுறித்து போலீசார் உங்களை விசாரிப்பர் என்று கூறினார். பின் வந்த அழைப்பில், மும்பை குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக கூறி, உங்கள் மீது ஜாமினில் வர முடியாத இரு பிடிவாரண்ட்கள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து வைக்கவும், விசாரணை முடிந்தபின், உங்கள் பணம் மீண்டும், உங்களின் வங்கிக்கணக்கில் வந்து விடும் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஆனந்தன், தனது வங்கிக் கணக்கில் இருந்த, 25.48 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும், அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்தன், திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.