செஞ்சி:செஞ்சியில் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்தவரின் கார்டை மாற்றி மோசடி செய்த வடமாநில ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.செஞ்சி பர்வத ராஜகுல தெருவைச் சேர்ந்தவர் சக்கரை மகன் செல்வம் 36; பஞ்சர் கடையில் வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் மாலை 3:15 மணிக்கு மனைவி கீதாவுடன், திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்குச் சென்று, அங்கிருந்த டிப்டாப் ஆசாமியிடம், ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பின் நெம்பரை சொல்லி, பேலன்ஸ் பார்க்க கூறினார்.அதற்கு அந்த நபர் பேலன்ஸ் வரவில்லை எனக்கூறி கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு, வேகமாக வெளியே செல்ல முயன்றார். கார்டை மாற்றிக் கொடுத்ததை கவனித்த கீதா கணவர் செல்வத்திடம் கூறினார்.உடன் செல்வம், பிடிக்க முயன்றதும் அந்த நபர் தப்பியோடினார். அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்த சோதனை செய்தபோது, அவர் கத்தை கத்தையாக ஏ.டி.எம்., கார்டுகளும், பணமும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த நபரை தர்ம அடி கொடுத்தனர்.தகவலறிந்த செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களிடம் சிக்கிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் டிவேட், 35, என தெரியவந்தது. அவரிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் 99 ஏ.டி.எம்., கார்டுகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
காரில் தப்பிய கூட்டாளிகள்
மோசடி பேர்வழி தனியாக வராமல் ஆந்திர பதிவு எண் கொண்ட வெள்ளை நிற மாருதி ஷிப்ட் காரில் கூட்டாளிகளுடன் வந்துள்ளார். ஏ.டி.எம்., மையம் வெளியே காத்திருந்த கூட்டாளிகள் விஜய் டிவேட் பொதுமக்களிடம் சிக்கியதும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காரில் எந்தனை பேர் இருந்தனர் எங்கு தப்பிச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.