| ADDED : ஜூன் 26, 2024 04:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் சிக்னல் பகுதியில் பயணிகள் நிழற்குடையில்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்னர்.விழுப்புரம் நான்கு முனை சாலை சிக்னல் சந்திப்பு, நேருஜி சாலை திரும்பும் பகுதியில் புதுச்சேரி, கடலுார், நெய்வேலி மார்க்கமாகச் செல்லும் பொதுமக்கள், அங்குள்ள மேற்கு காவல் நிலைய வாயில் பகுதியிலேயே நிற்கின்றனர்.அங்கு நிரந்தர பஸ் நிறுத்தம் இல்லாததால் நீண்ட காலமாக சிக்னல் வளைவு திரும்பும் இடத்திலேயே பயணிகள் நிற்பதும், அதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.இதற்காகாக, சற்று தொலைவில் உள்ள மார்க்கெட் கமிட்டி அருகே தற்காலிக பஸ் நிறுத்தத்தை மிகச்சிறிய அளவில் நிழற்குடை ஏற்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் தற்போது டவுன் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.மிகச்சிறியளவில் உள்ள நிழற்குடையில் பயணிகள் நிற்பதற்கு போதிய இடவசதியில்லை. இதனால், வழக்கம் போல் மீண்டும் மேற்கு காவல் நிலையம் முன் சாலையோரம் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.அந்த இடங்களையும் ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால், பயணிகள் நிற்க இடமின்றி சாலையில் நிற்கின்றனர்.அங்குள்ள சிறிய பஸ் நிறுத்த நிழற்குடையில் சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுவதால், மக்கள் சாலையில் நிற்கின்றனர். மேலும், அதன் அருகே நிரந்தரமாக கூழ் கடை, செருப்பு கடை என பிளாட்பார கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, குறுகிய அந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.இதனால் அந்த நிழற்குடையில், வாகனங்கள் ஆக்கிரமிப்பையும், பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, பயணிகள் நின்று செல்வதற்கு, புதிய நிழற்குடையை அமைக்க வேண்டும்.பஸ்களை, மேற்கு காவல் நிலையம் முன் நிறுத்தாமல், பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.