விழுப்புரம் மாவட்டத்தில், சதுரங்க பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், சர்வதேச வீரர்களாக உருவாகி உள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது தந்தை வாசுதேவன், ரேடியோ சர்வீஸ் கடை நடத்தி வந்தார். மாற்றுத் திறனாளியான கண்ணன், பி.ஏ., பட்டப் படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்துள்ளார். அரசு வேலைக்கு காத்திருக்காமல், கடந்த 2009 ம் ஆண்டு, ராஜா தேசிங்கு சதுரங்க பயிற்சி நிலையத்தை துவக்கினார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக சிறப்பான பயிற்சி அளித்து வருகிறார். இங்கு பயின்ற நுாற்றுக்கும் மேற்பட்ட 100 மாணவர்கள் சர்வதேச தர புள்ளிகளை பெற்று, சாதனை புரிந்துள்ளனர். ராஜா தேசிங்கு சதுரங்க பயிற்சி மையத்தின், தலைமை பயிற்சியாளரான கண்ணன், தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகள் சதுரங்க போட்டியில், 2017 ம் ஆண்டு இரண்டாம் இடமும், 2018 ம் ஆண்டு மூன்றாமிடமும் பிடித்தார்.கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற ஆன்லைன் சதுரங்க போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்றார். கர்நாடக மாநிலத்தில், 2021ம் ஆண்டு நடந்த தேசிய போட்டியில் 5 ம் இடத்தை பிடித்தார். மேலும், தேசிய சதுரங்க நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பொதுவான பிரிவில் நடைபெற்ற தேசிய போட்டியில், கண்ணன் 5வது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு (2024) ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய போட்டியில் 4 ம் இடத்தை பிடித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவி நித்யஸ்ரீ சரவணன், ஆசிய போட்டியில் ( ஆன்-லைன்) தங்க மெடல் பெற்றுள்ளார். இதே மாணவி இடம்பெற்ற அணி, பள்ளி மாணவர்களுக்கான தேசிய சதுரங்க போட்டியில், இரண்டாமிடத்தை பிடித்தது.சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கு, மாவட்ட சதுரங்க கழக கவுரவத் தலைவர் அர்ச்சனா சுப்புராமன், தலைவர் ஓமண கிருஷ்ணன், நிர்வாகிகள் நெடுஞ்செழியன், தசரதன், ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக பயிற்சியாளர் கண்ணன் தெரிவித்தார். -நமது நிருபர் -