விழுப்புரம்: விழுப்புரம் அருகே நான்கு வழிச்சாலை திட்டத்தில் குறுக்கிடும் மின்சார டவர் லைன்களை புதியதாக மாற்றி அமைப்பதற்கு, மின்நிறுத்த அனுமதி கிடைக்காததால், டவர் லைன்கள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விழுப்புரம் - புதுச்சேரி இடையே முதற்கட்டமாக 29 கி.மீ., நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இதில், வளவனுார் பைபாஸ் சந்திக்கும் மேம்பாலம் பகுதியில், சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் 2 (230 கே.வி.ஏ.,) அதி உயர் மின்னழுத்த நெய்வேலி மின்சார டவர் லைன்கள் குறுக்கிடுகிறது. இப்பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதற்காக, நகாய் அதிகாரிகள், மின்துறை பவர் கிரீட் (டவர் லைன்) பிரிவில் அனுமதி பெற்று, நான்கு வழிச்சாலை திட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம், புதிய டவர்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள பழைய டவர்களுக்கு பதிலாக புதிதாக உயரமாக டவர் அமைக்கும் பணிகள் நடக்கிறது.கெங்கராம்பாளையத்தில் 5 டவர்களும், அற்பிசம்பாளையத்தில் 2, எதிர்புறம் வளவனுாரில் 3, மல்ராஜன்குப்பத்தில் 2 என, 12 டவர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது.இதில், 60 முதல் 80 அடி உயரத்தில், கடந்த மாதம் இறுதியில் புதிய டவர்கள் அமைக்கப்பட்டு, அந்த டவர்களில் இருந்து மின்சார லைன்கள் பிடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த லைன்கள் பிடித்து, இணைப்பு வழங்க, என்.எல்.சி., பவர் கிரீட் லைன் பிரிவு அனுமதி வழங்க வேண்டும். அவர்கள் மின் துண்டிப்பு செய்து என்.எல்.சி., அனுமதி வழங்கினால் தான், புதிய டவர்களிலிருந்து மின் இணைப்பு வழங்க முடியும். தேர்தல் காரணமாக அனுமதி வழங்குவதில் தாமதம் இருந்தது. இன்னும் அனுமதி கிடைக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து, அப்பணி களை மேற்கொண்டு வரும் நிறுவனத்தினர் கூறியதாவது:இப்பகுதியில் மொத் தம் 12 டவர்கள் புதிதாக அமைக்கப்படுகிறது.இதற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிய பிறகு பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது, புதிய டவர்கள் அமைக்கப்பட்டு லைன் பிடிக்கப்படுகிறது. முதலில் 5 டவர்கள் முழுவதும் முடிக்கப்பட்டு, அதில் மின்சார லைன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. எல்.சி., அனுமதி வழங்கப்பட்டால், ஒரு வார காலத்தில் மின்சார லைன் இழுந்து இணைப்பு வழங்கப்படும். மீதமுள்ள 7 டவர்களிலும் அடிப்படை வேலை நடந்துள்ளது.அங்கு பழைய டவர் லைன்கள் குறுக்கிட்டு செல்வதால், அதற்கு மேல் அங்கு வேலை செய்ய முடியாது. மின் நிறுத்தம் செய்து எல்.சி., வழங்கினால், அந்த பணியும் உடனடியாக முடிக்கப்படும் என்றனர்.இதனால், நகாய் திட்ட அதிகாரிகளும், எல்.சி., பவர் கிரீட் பிரிவு அதிகாரிகளும், இந்த பணிகளின் நிலையை அறிந்து, விரைந்து அனுமதியளித்து, மின் டவர் லைன்களை முடிக்கவும், அதன் பிறகு, நான்கு வழிச்சாலைக்கான பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.