உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எஸ்.பி., தலைமையில் திடீர் சாராய வேட்டை தகவல் கசிந்ததால் வியாபாரிகள் எஸ்கேப்

எஸ்.பி., தலைமையில் திடீர் சாராய வேட்டை தகவல் கசிந்ததால் வியாபாரிகள் எஸ்கேப்

விழுப்புரம்: விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவில் எஸ்.பி., தலைமையில் நேற்று திடீர் சாராய வேட்டை நடத்தினர். ஆனால், தகவல் கசிந்ததால், எதுவும் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் இறந்தனர். இதனையடுத்து, கள்ளச்சாராயத்தைத் தடுக்க மாவட்டங்கள் தோறும், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்திலும், கடந்த ஒரு வார காலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் நகரில் எப்போதும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறும் பெரிய காலனி ஜி.ஆர்.பி., தெரு பகுதியில், போலீசார் சோதனை நடத்தவில்லை என புகார் எழுந்தது.மேலும், கள்ளச்சாராயம் அருந்திய ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கிடந்ததாகவும், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் குற்றம் சாட்டியிருந்தார்.இதனையடுத்து, எஸ்.பி., தீபக் சிவாச், ஏ.டி.எஸ்.பி., திருமால், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., இளங்கோவன், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில், சீருடையின்றி 50 போலீசார், நேற்று காலை 7:00 மணிக்கு, பெரிய காலனி, ஜி.ஆர்.பி.தெரு பகுதிகளில் திடீர் கள்ளச்சாராய சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு வீதி வீதியாக சுற்றியும், சாராயம் விற்றவர்களின் வீடுகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வித சாராய விற்பனையும், சாராயம் பதுக்கி வைத்திருப்பது போன்ற எந்த தடமும் சிக்கவில்லை. 20 நிமிடம் சோதனை நடத்தி விட்டு, போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவில் போலீசார் திடீர் சாராய வேட்டை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் கசிந்ததால் எஸ்கேப்

இந்த பகுதியில், போலீசார் சாராய ரெய்டு நடத்தப்போவதான, தகவல் முன் கூட்டி இரவே கசிந்ததால் சாராய வியாபாரிகள் எஸ்கேப் ஆகினர். மேலும், சாராயம் விற்றவர்களின் வீடுகள் அனைத்தும், ஆட்கள் யாருமின்றி பூட்டப்பட்டிருந்தது.சாராயம் விற்பனைக்கு பயன்படுத்திய பொருள்கள் கூட எதுவம் இல்லாமல், தடயத்தையும் மறைக்கும் அளவுக்கு, உஷாராகவிட்டதாக, மது விலக்கு அமல் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி