உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து... பாதிப்பு; இரவில் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து... பாதிப்பு; இரவில் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனம் : போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் பகல் நேரத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.திண்டிவனம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 268 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பாதாள சாக்கடை பணி துவங்கியது. இப்பணியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே போகிறது. திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பிரதான போக்குவரத்து சாலையான ஈஸ்வரன் கோவில் தெருவில், தற்போது முழு வீச்சில் பொக்லைன் இயந்திரம் கொண்டு, சிமென்ட் சாலையை உடைத்து, பைப், மேன்ேஹால் அமைக்கும் பணி கடந்து இரண்டு நாட்களாக பகல் நேரத்தில் நடைபெற்று வருகிறது.இதனால், திண்டிவனத்திற்கு, திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஈஸ்வரன் கோவில் தெரு வழியாக (ஒரு வழிப்பாதை) வந்து செல்ல வேண்டும்.தற்போது தெருவின் ஒரு பக்கத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைப்பதால், கடந்த இரண்டு நாட்களாக ஈஸ்வரன் கோவில் தெருவில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏற்கனவே திண்டிவனம் நகராட்சியில் சப் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அனைத்து வியாபாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நேரு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, செஞ்சி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அனைத்து வணிக நிறுனங்கள் உள்ளது.இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை பகல் நேரத்தில் மேற்கொண்டால், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இரவு நேரத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இரவு நேரங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால், தற்போது போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையான ஈஸ்வரன் கோவில் தெருவில், பகல் நேரத்தில் பணிகள் மேற்கொள்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பகலில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்வதால் சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது, கண்ணை மறைக்கும் வகையில் காற்றில் புழுதி பறக்கிறது. இதற்காக தினமும் இரண்டு வேளையும், லாரிகள் மூலம் புழுதி பறக்காமல் இருப்பதற்காக தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நடைமுறையை ஒழுங்காக பின்பற்றாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் புழுதி காற்றில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், பகல் நேரங்களில் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கு முக்கியத்தும் வாய்ந்த சாலைகளில், பாதாள சாக்கடை பணிகளை யாருக்கும் தொந்தரவு இல்லாமல், இரவு நேரத்தில் மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ