| ADDED : ஏப் 24, 2024 02:56 AM
வானுார், : எடச்சேரியில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி திறக்கப்படாத ஒன்றிய துவக்கப்பள்ளியின் புதிய கட்டடத்தின் காரைகள் திடீரென பெயர்ந்து விழுவதால் பெற்றோர்கள் அதிர்ச்சியைடைந்துள்ளனர்.வானுார் தொகுதிக்குட்பட்ட எடச்சேரி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 70 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதானதால் அருகிலேயே புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்காக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-23) புதிய பள்ளிக்கட்டம் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து வகுப்பறைக்குள்ளும் வெளியே யும் மாணவர்களைக் கவரும் வகையில், பறவைகள், மீன்கள், பழ வகைகள் என விதவிதமா படங்கள் வரையப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை.இந்நிலையில் இந்த புதிய கட்டட வகுப்பறைக்குள் சீலிங்கில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தரமற்ற நிலையில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை நம்பி எப்படி தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மேலும், இதுபோன்று கட்டம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இக்கட்டடத்தை கலெக்டர் ஒருமுறை ஆய்வு செய்த பின்னரே பள்ளிக் கட்டடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வானுார் பி.டி.ஓ.,விடம் கேட்டபோது, 'சீலிங் இடிந்து விழுந்தது உண்மை தான். அந்த ஒப்பந்ததாரரிடம் பேசி, சீலிங் முழுவதையும் இடித்து விட்டு, மீண்டும் புதிதாக பூசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.