| ADDED : ஜன 17, 2024 07:37 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வண்டி ஊர்வலம் விமர்சையாக நடந்தது.விக்கிரவாண்டி, பனைய புரம், தொரவி, கயத்துார், வி.சாத்தனுார், ஆசூர், சின்னதச்சூர், மேலக்கொந்தை, தென்பேர், கப்பியாம்புலியூர் உட்பட பல கிராமங்களில் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.விவசாயிகள் தங்களது தோழனாக திகழும் காளைகள் மற்றும் பசு மாடுகளை குளிப்பாட்டி பொங்கல் வைத்து, படையலிட்டனர்.மாலை தங்களது வண்டிகளையும், மாடுகளையும் அலங்கரித்து மந்த கரைக்கு சென்று சிவனுக்கு படையலிட்டு மஞ்சள் நீர் தெளித்து வண்டியில் அமர்ந்திருந்த சிறுவர்கள் பொங்கலோ பொங்கல் என, மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் ஊர்வலம் சென்றனர்.விக்கிரவாண்டியில் தாலுகா அலுவலகம் எதிரில் மந்தக்கரை பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரன் கோவிலில் இருந்து அகத்தீஸ்வரன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், டிராக்டரில் மாடவீதி வழியாக ஊர்வலம் சென்றது.அரசு மருத்துவ மனை அருகிலுள்ள மந்தக்கரை பகுதியில் மாட்டு வண்டி ஊர்வலம் புறப்பட்ட்டு, மாடவீதி வழியாக சென்றது. விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், முருகவேல், மன்மதவேல் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.