உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிடப்பில் போடப்பட்ட வளவனூர் பாலம் கட்டும் பணி: உயர் மின்னழுத்த டவர்கள் மாற்றப்படுமா?

கிடப்பில் போடப்பட்ட வளவனூர் பாலம் கட்டும் பணி: உயர் மின்னழுத்த டவர்கள் மாற்றப்படுமா?

விழுப்புரம் : விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை திட்டத்தில், வளவனுார் பைபாசில் பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள உயர்மின்னழுத்த டவர்களைமாற்றி அமைக்காததால் பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.விழுப்புரம் - நாகை இடையே 181 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் துவங்கி புதுச்சேரி எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ., துார சாலைப் பணி முடிந்து, இறுதிக்கட்டமாக பாலம் கட்டும் பணி நடக்கிறது.விழுப்புரம் - புதுச்சேரி இடையே சாலை முழுமையாக முடிந்து தயாராக உள்ள நிலையில், கண்டமங்கலம் ரயில்வே பாலம், வளவனுார் அடுத்த புதிய பைபாஸ் சந்திப்பு பாலம் ஆகிய இரண்டு திட்டப் பணிகள் முடிக்காமல், நிலுவையில் உள்ளது.இதில், வளவனுார் அருகே கெங்கராம்பாளையத்தில் 600 மீட்டர் தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பைபாஸ் சந்திப்பு பாலம், உயரமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, இணைப்பு பாலத்துக்கான உயர்மட்ட கான்கிரீட் மட்டும் போடப்பட்டுள்ளது.புதிய பைபாஸ் இணைப்பு பாலத்துக்கான பணிகள் துரிதமாக நடந்து வந்த நிலையில், அந்த இடத்தின் அருகே இரண்டு உயர் மின்னழுத்த டவர் லைன்கள் பிரிந்து செல்கிறது. விழுப்புரம் - புதுச்சேரி வழியாகச் செல்லும் இந்த லைன்கள், குறுக்கே இணைப்பு பாலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலைப் பணிகள் நடந்துள்ள நிலையில், உயர்மின்னழுத்த 2 டவர்களை மாற்றி அமைப்பதற்காகநிலம் கையகப்படுத்தி கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த நிலத்துக்கான இழப்பீடு தொகை செலுத்தாததால், பணிகளை விவசாயிகள் தடுத்துள்ளனர். இதேபோல், அந்த டவர் லைன்களை மாற்றியமைப்பதற்கு ஒப்பந்த நிறுவனத்துக்கும் உரிய தொகையை, நகாய் தரப்பில் செலுத்தவில்லை. அந்த டவர் லைன்களை மாற்றியமைக்கும் பணியை தாமதமாக தொடங்கியதாலும், லைனை மாற்றுவதற்கான மின் தளவாட உபகரணங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாலும் பணிகள் துவங்கவில்லை. இதனால், வளவனுார் பைபாஸ் இணைப்பு பாலம் கட்டும் பணிகள் 50 சதவீதம் முடிந்தும், கிடப்பில் போடப்பட்டுள்ளது.விழுப்புரம், ஜானகிபுரம் தொடங்கி புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலை தயாராகியுள்ள நிலையில், வளவனுார் பைபாஸ் பாலம் முடிக்காமல் குறையாக உள்ளது.இது தாமதமாகும் என்பதால், அந்த இடத்தில் மட்டும், சர்வீஸ் சாலையை தயார் செய்துள்ளனர். இதனால், தற்காலிகமாக வாகனங்கள் அந்த சர்வீஸ் சாலை வழியாக செல்கின்றன.உயர்மின் அழுத்த டவர்களை விரைவில் அகற்றி, பாலம் கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நான்கு வழிச்சாலை மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை