| ADDED : நவ 18, 2025 06:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகை போாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை 11:00 மணிக்கு திரண்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், உள்ளாட்சி நியமன பதவி தேர்வில், பாரபட்சம் இருப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது. தொடக்கத்தில், கலெக்டர் எங்களை அழைத்து அறிவுறுத்தியதன் பேரில், எங்கள் அமைப்பிலிருந்து 100 பேர் வரை உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர். 2000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை செலவிட்டு மனு தாக்கல் செய்து காத்திருந்தனர். ஆனால், அரசாணையில் குறிப்பிட்டபடி விதிமுறைகளை பின்பற்றாமல், தகுதியில்லாத பலருக்கு வாய்ப்பளித்துள்ளனர். விக்கிரவாண்டி, காணை, மயிலம், வானுார், கண்டமங்கலம் வட்டாரங்களில், வேட்பு மனு தாக்கல் செய்யாதவர்கள், சமூக சேவைப்பணியில் இல்லாதவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரநிதித்துவம் இல்லாததால், இந்த தேர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பாரபட்சமான இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தி மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.