விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், டிட்வா புயலில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சவுக்கு பயிர்கள் மடிந்து சேதமடைந்துள்ளது. ஆனால், நிவாரண கணக்கெடுப்பில் புறக்கணிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் டிட்வா புயல் தாக்கத்தால், ரெட் அலர்ட் விதிக்கப்பட்டு மூன்று நாட்கள் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே மாவட்டத்தில் தொடர்ந்த மழை தாக்கத்தால், நிலப்பகுதியில் நன்கு ஈரப்பதம் இருந்த நிலையில், பலத்த மழை மற்றும் டிட்வா புயல் காற்றின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பயிரிட்டிருந்த சம்பா நெற்பயிர்கள், கரும்பு, மரவள்ளி, உளுந்து, வேர்க்கடலை பயிர்கள், மழை நீரில் மூழ்கி பல இடங்களில் பாதிக்கப்பட்டது. இதே போல், கொய்யா, வாழை, கத்தரி, தர்பூசணி போன்ற தோட்டப் பயிர்களும் பெரும் சேதமடை ந்தன. குறிப்பாக சவுக்கு பயிர்கள் தொடர் மழை, புயல் காற்றில் ஒடிந்து வீணாகியது. மழை விட்ட நிலையில், தற்போது வேளாண்துறை சார்பில் பயிர்கள் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 200 எக்டர் நெற்பயிர்களும், 50 எக்டர் உளுந்தும், 10 எக்டர் வேர்க்கடலை பயிர்களும் நீரிழ் மூழ்கி பாதித்துள்ளதாகவும், தோட்டக்கலை பயிர்கள் 80 எக்டர் பரப்பில் மூழ்கியுள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். மேலும், கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அதிகளவில் பாதிக்கப்பட்ட சவுக்கு பயிர்கள் குறித்து, வேளாண் துறையினர் கணக்கெடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வேளாண் துறையினர், தோட்டக்கலை துறையினரின் கணக்கெடுப்பில், சவுக்கு பயிர் வரவில்லை என ஒதுங்கி நிற்கின்றனர். மாவட்டத்தில் நெல், கரும்பை போல், அதிகளவில் சவுக்கு பயிர்களும், அதனுடன் ஊடுபயிர்களாக உளுந்து, வேர்க்கடலை, எள் போன்றவை பயிரிடப்படுகிறது. தற்போது, சவுக்கு பயிரிட்டு, 6 மாதங்கள், ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் ஆன பயிர்கள், பலத்த காற்று மழையில் மடிந்தும், ஒடிந்தும் வீணாகியுள்ளது. விழுப்புரம் அடுத்த கண்டமானடி, திருப்பாச்சனுார், தளவானுார், காவணிப்பாக்கம், அரியலுார் பகுதியிலும், இதே போல் மயிலம், திண்டிவனம், வானுார் தாலுகா பகுதியிலும் 1000 ஏக்கருக்கும் மேல் அதிகளவில் சவுக்கு பயிர்கள் சேதமடைந்துள்ளது. இனி, மடிந்த சவுக்குகளை நேர்படுத்தினாலும், ஒடிந்து போகும். அதே போல், ஊடு பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, பாதிக்கப்பட்ட சவுக்கு பயிர்களையும் கணக்கெடுப்பில் சேர்த்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.