உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எண்ணெய் பனை சாகுபடி இரு மடங்கு அதிகரிப்பு! மானியம் வழங்கி அரசு ஊக்குவிப்பு

எண்ணெய் பனை சாகுபடி இரு மடங்கு அதிகரிப்பு! மானியம் வழங்கி அரசு ஊக்குவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லாபம் தரும் எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், சாகுபடி பரப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், லாபம் தரும் எண்ணெய் பனை சாகுபடி செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் பாமாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதால், மாவட்டத்தில், 950 ஏக்கர் பரப்பளவில் பாமாயில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. விழுப்புரம், கோலியனுார், விக்கிரவாண்டி, கண்டமங்கலம், திருவெண்ணெய்நல்லுார், காணை வட்டாரங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது பல்லாண்டுகள் பலன் தரும் பயிராகும். ஆண்டு தோறும் பாமாயில் எண்ணை தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, அரசு மானியம் வழங்கி, சாகுபடியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன் கூறியதாவது: தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனை திட்டத்தின் மூலமும், விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலமும் சாகுபடி செய்ய மானியத்துடன் வாய்ப்பு வழங்குவதால், கடந்த 3 ஆண்டுகளில் பாமாயில் சாகுபடி பரப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேலும் சாகுபடியை அதிகரிக்க, ஒரு எக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் மானியத்தில், உள்ளூர் மற்றும் அயல்நாட்டு எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் உள்ளே ஊடுபயிர் செய்வதற்கும் எக்டருக்கு 5,250 ரூபாய் மற்றும் பராமரிப்புக்கு 5,250 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் முதல் 4 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். மேலும், சொட்டுநீர் பாசனம், அறுவடை கருவிகள், மின் மோட்டார் மற்றும் உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனால், லாபமும், நிலையான வருமானமும் கிடைக்கிறது. அரசு மானியத்தில் நடவு செடிக ள், ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு மானிய உதவிகளும் கிடைக்கும். மழை வெள்ளம் இடர்பாடுகளில் மழை நீர் தேங்கினாலும், இந்த பாமாயில் பயிர் பாதிக்காது. பயிரிட்ட 3, 4 ஆண்டுகளுக்கு பிறகு, பாமாயில் மரத்திலிருந்து எக்டருக்கு 5 டன் மகசூல் கிடைக்கும். பிறகு 5 ஆண்டு மரத்திலிருந்து 12 டன்கள், 6 ஆண்டு மரத்திலிருந்து 25 டன்கள், அதன் பிறகு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு, தலா 30 டன்கள் அளவில் மகசூல் கிடைக்கும். மாதத்திற்கு இரண்டு முறை நிலையான வருவாய் கிடைக்கும். இவ்வாறு அன்பழகன் கூறினார். கூடுதல் மகசூல் எடுக்கும் விவசாயிக்கு, டன்னுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை அரசு வழங்குகிறது. அதற்கான விலையும் அரசால் நிர்ணயிக்கப்படுவதால், சந்தை விலை குறைந்தாலும், விவசாயிகள் பாதிக்காமல் பயன்பெறுகின்றனர். இப்பயிர் இடைவெளியில் மஞ்சள், கருணை, வாழை, மிளகு போன்ற பயிர்கள் ஊடுபயிராக செய்வதால், லாபம் தரும் எண்ணை பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை