உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தரைப்பாலம் பணி துவங்க எதிர்ப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு

 தரைப்பாலம் பணி துவங்க எதிர்ப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்னறிவிப்பின்றி துவங்கப்பட்ட தரைப்பாலம் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் பிரதான சாலையில் திருமுண்டீச்சரம் கிராமத்தில் இருந்த தரைப் பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் நிரந்தர தரைப் பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று காலை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், 'எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியை தொடங்கினால் இவ்வழியாக செல்லக்கூடிய பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் எப்படி செல்வது. மேலும் இப்பகுதியை கடக்க 15 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இப்பபகுதியில் தற்காலிக பாதை அமைத்துவிட்டு பணியை துவங்க வேண்டும்' என பணியை நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் ரகுராமன் மற்றும் போலீசார் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் தரைப்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகே தற்காலிக சாலை அமைத்துவிட்டு பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். சாலை அமைப்பதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் கோரிக்கையையேற்று, தற்காலிக சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு துரிதகதி யில் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஜயலட்சுமி கூறுகையில், 'மலட்டாறு ஓரமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதையெடுத்து அப்பகுதி யில் கருங்கற்களைக் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இப்பகுதியில் புதிய தரைப்பாலம் அமைக்க 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 90 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இப்பகுதி மக்கள் நலன் கருதி இரவு பகல் வேலையாக 20 நாட்களில் துரிதமாக பணியை முடித்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை