விழுப்புரம், : விழுப்புரத்தில் மாநில திட்டக்குழுவின் வட்டார வளர்ச்சி திட்டம் குறித்து முதல்நிலை அலுவலர்களுக்கான மாவட்ட அளவில் பயிற்சி கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:வட்டார அளவில் வளர்ச்சி உருவாக்கிடும் வகையில், மாநிலம் முழுதும் 50 வட்டாரங்கள் தேர்வு செய்யப்படுள்ளது. அதற்கு, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 187 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டு, கல்வி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட 7 பொருள்கள் வகைப்படுத்தபட்டுள்ளது.அதன்படி, பின்தங்கிய வட்டாரங்களை, மாவட்ட குறியீடுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும். பிறகு மாநில குறியீடுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும். அதற்காக ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒரு மேம்பாட்டு திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்க ஒரு பிரதிநிதியை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மே மாத இறுதிக்குள், தொடர்புடைய துறை அலுவலர்கள், இதன் பிரதிநிதியின் வழிகாட்டுதலை பின்பற்றி அறிக்கை தயாரித்து, எனது ஒப்புதலுடன், மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பிவைக்க வேண்டும்.பிறகு, மாநில திட்டக்குழு அங்கிகரித்த பணிகளை நடைமுறைப்படுத்த, அடுத்த 3 ஆண்டுகள் கொடுக்கபடும். அதன் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லுார், மேல்மலையனுார் வட்டாரங்களில், மேம்பாட்டு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பயிற்சிகள், முதல்நிலை அலுவலர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், ஊராட்சிஉதவி இயக்குனர் விக்னேஷ், சென்னை சமூக பணி கல்லுாரி பேராசிரியர்கள் வசந்த், ஜெயசீலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.