| ADDED : ஜன 20, 2024 12:54 AM
விழுப்புரம்:ஆன்லைன் மூலம் இன்ஜினியரிடம் ரூ.3.78 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 24. இன்ஜினியர். ஐ.டி., நிறுவன ஊழியரான இவரை கடந்த 31ம் தேதி மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஓட்டல்களின் புகைப்படம் அனுப்பி வைத்து, அதற்கு 5 ஸ்டார் ரேட்டிங் தந்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்றார். அதனை நம்பிய பிரித்திவிராஜ், மர்ம நபர் கூறியதுபோல் செய்து, ரூ.300 பெற்றார். பின் மர்ம நபர் அனுப்பிய 'வெப் லிங்'கில், பிரித்திவிராஜ் தனது விபரங்களை தந்து யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை உருவாக்கினார்.உடன் மர்ம நபர், பிரித்திவிராஜை ஒரு டெலிகிராம் குரூப்பில் சேர்த்து சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்றார். அதன்படி பிரித்திவிராஜ், ரூ.2,000 செலுத்தி, 2,800 பெற்றார். தொடர்ந்து அவர், தனது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு கடந்த 16ம் தேதி வரை ரூ.3.78 லட்சம் அனுப்பி டாஸ்க்கை முடித்து, பணத்தை எடுக்க முயன்றபோது, இணைப்பு துண்டிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரித்திவிராஜ் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.