| ADDED : ஜூலை 17, 2024 12:13 AM
சிவகாசி : செயல்பாடாத சுகாதார வளாகம், துார்வாராத வாறுகால் என திருத்தங்கல் 5 வது வார்டு சிறுவர் பூங்கா தெரு, ஓதுவார் சந்து பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பார்வதி, சக்திவேல், அன்னத்தாய், சங்கரேஸ்வரி, பத்மாவதி, காளி ராஜன் கூறியதாவது, ஆலமரத்துப்பட்டி ரோட்டில் சிறுநீர் கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. இதனை பராமரிப்பதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ. 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது ஆனால் இதுவரையிலும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.இதனால் பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. இதே பகுதியில் 2013ல் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்ட நாளிலிருந்து பயன்பாட்டிற்கு வராமல் தற்போது கட்டடம் சேதம் அடைந்து விட்டது. இதனைப் பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது இதனால் பெண்கள் திறந்த வெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.ஓதுவார் சந்து பகுதியில் தெருவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரோடு சேதம் அடைந்தது. இதுவரையில் சீரமைக்கப்படவில்லை. குறுகிய தெரு என்பதால் டூவீலர் செல்வதே சிரமமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் இதுவரையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், இது விரிவாக்கப்பட்ட பகுதி, மாநகராட்சியில் இல்லை என பதில் அளிக்கின்றனர்.சிறுவர் பூங்கா தெருவிலும் குடிநீர் குழாய் பதிக்கவில்லை. மெயின் ரோட்டில் உள்ள பெரிய வாறுகால் துார்வாரப்படாததால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரத் கேடும் ஏற்படுகின்றது. மேலும் ரோடு சேதம் அடைந்துள்ளது. சிறுவர் பூங்கா பகுதியில் ஒரு சில தெருக்களிலும் வாறுகால் முழுமையாக துார்வாரப்படவில்லை. நாய்கள் தொல்லையால் குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்., என்றனர்.