உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சனிப்பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் அனுமதி மறுப்பால் வாக்குவாதம்

சனிப்பிரதோஷம்: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் அனுமதி மறுப்பால் வாக்குவாதம்

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்க வேண்டும் என தாணிப்பாறை வனத்துறை கேட் முன் குவிந்த பக்தர்கள் வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சதுரகிரியில் சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது. நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டதாலும், நேற்று முன் தினம் மலையில் கனமழை பெய்ததால் ஓடைகளில் அதிகளவு நீர்வரத்து ஏற்படும் நிலை இருந்ததாலும், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை நேற்று முன்தினம் இரவு அறிவித்திருந்தது.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வெளிமாவட்ட பக்தர்கள் குவியத் துவங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்து காலை 11:00 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.அப்போது மழை பெய்யாமல் வெயில் அடிப்பதால் தங்களை மலையேற அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பக்தர்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்ததால் கேட் முன்பு பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.ஏமாற்றமடைந்த பல பக்தர்கள் வனத்துறை கேட் முன் சூடமேற்றி, கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மற்றவர்கள் எப்படியாவது தங்களை மலையேற அனுமதித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.இதற்கிடையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை