உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., சிவன் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

ஸ்ரீவி., சிவன் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, வன்னியம்பட்டி, கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அவை தனி நபர்களுக்கு குறைந்த தொகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.படிக்காசுவைத்தான் பட்டியை சேர்ந்த நாகராஜ், 93 சென்ட் விவசாய நிலத்தை, ஆண்டுக்கு, 1,500 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்த இடத்தில் விவசாயம் செய்யாமல் உள்குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த நிலத்தில் ஒரு கோவில், வீடு, தகர செட்டுகள், மாட்டுத் தொழுவம் கட்டியிருந்தனர். இதை அகற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்தியநாராயணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அகற்றப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இரண்டு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில் தக்கார் லட்சுமணன், செயல் அலுவலர் முத்து மணிகண்டன், பல்வேறு கோவில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு ஆக்கிரமிப்புகளை இயந்திரத்தால் இடித்து அகற்றினர்.சத்திய நாராயணமூர்த்தி கூறியதாவது:வைத்தியநாத சுவாமி கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2009க்கு பின் இக்கோவிலில் பணியாற்றிய செயல் அலுவலர்கள், உதவி ஆணையர், இணை ஆணையர் உட்பட பல்வேறு அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வைத்தியநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் முத்து மணிகண்டன் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிமிரப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டதில் எழுந்த புகார்களின் அடிப்படையில் இங்கு பணியாற்றிய செயல் அலுவலர் ஜவகர் சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ