உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஆண்டாள் கோயில் திருமுக்குளம் வேதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஆண்டாள் கோயில் திருமுக்குளம் வேதனையில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தின் தடுப்பு சுவர்கள், படிகள் சேதமடைந்ந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் சீரமைக்கப்படாததால் பக்தர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களும் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். எனவே, காலதாமதமின்றி குளத்தை சீரமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானது இந்த திருமுக்குளம். ஆண்டாள் நீராடிய குளமென பெருமை பெற்றது.நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த குளத்தில் ஒரு முறை தண்ணீர் நிரம்பினால் மூன்று ஆண்டுக்கு நிலத்தடி நீருக்கு பாதிப்பு இருக்காது.இக்குளத்தில் தண்ணீர் நிரம்பும் போதெல்லாம் மாசி மாதம் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இத்தகைய பெருமை பெற்ற திருமுக்குளத்தின் நான்கு பக்கமும் உள்ள கரைகளின் தடுப்பு சுவர்கள், படிக்கட்டுகள் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது. இதில் குளத்தின் வடக்கு பக்க தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.ஆனால், குளத்தை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக இதுவரை குளம் சீரமைக்கப்படாமல் சிதைந்து வருகிறது.மிகவும் பழமை வாய்ந்த கோயில் குளங்களை சீரமைக்க வேண்டும் எனில் தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து, அதனடிப்படையில் மாவட்ட, மண்டல குழுக்களின் ஆய்வு நடத்தப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படும் பாரம்பரிய கமிட்டியின் அனுமதி பெறப்பட்டு அதன் பின்னரே குளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலில் படி அனுமதி பெறுவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. அதே நேரம் குளத்தை சீரமைத்து தருவதற்கு பல நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். இந்நிலையில் அரசின் அனுமதி கிடைத்து ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால், அதன் பின்பு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குளம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களிடம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.எனவே, திருமுக்குளத்தை சீரமைப்பதில் தற்போதைய கோயில் நிர்வாகமும், மாவட்ட அரசு நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்தி திருமுக்குளத்தை சீரமைக்க வேண்டும் என ஆண்டாள் பக்தர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

குளத்தை காப்பாற்றுவது அவசியம்

சுப்பிரமணியன், தலைவர், நகை வியாபாரிகள் சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்றுவதற்கும், ஏழை எளிய மக்கள் குளிப்பதற்கும் வசதியாக கோயில் குளங்கள் பல உள்ளன. இதில் ஆண்டாள் நீராடும் திருமுக்குளம் மிகவும் புனிதமான குளமாகும். ஒருமுறை தண்ணீர் திரும்பினால் மூன்று ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். அத்தகைய குளத்தின் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது மிகுந்த மனவேதையை ஏற்படுத்துகிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய குளத்தை காப்பாற்றுவது அவசியம். இதற்காக கோயில் நிர்வாகம் மட்டுமின்றி பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மிகுந்த கவனம் செலுத்தி குளத்தை சீரமைப்பது அவசியம்.

உதவி செய்ய தயார்

-முருகதாசன், தலைவர், நண்பர்கள் ரோட்டரி சங்கம், ஸ்ரீவில்லிபுத்துார்: பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள திருமுக்குளத்தை காலதாமதம் இன்றி சீரமைப்பது அவசியம்.கோயில் நிர்வாகத்தின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிந்து, எங்களது நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இதற்காக கோயில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்து காத்திருக்கிறோம். ஆனால், எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ