உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு நேரக்கட்டுப்பாடு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு நேரக்கட்டுப்பாடு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது .விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேன், எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனைகளுக்கு அதிக செலவாகும் என்பதால் அரசு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. காய்ச்சல், உபாதைகளுக்கு பலரும் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு மருத்துவர்கள் நோயாளியை பார்க்கும் நேரத்தில் பார்வையாளர்களும் வருவதால் கலந்துரையாட முடியாமல் போகிறது. அதனால் தற்போது பார்வையாளர்கள் நேரம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.இதற்காக உள்நோயாளியை உடன் இருந்து பார்த்துக் கொள்பவருக்கு உதவியாளருக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை வைத்துள்ளவருக்கு நேரக்கட்டுப்பாடு பொருந்தாது.மேலும் நோயாளியை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் காலை 6:00 மணி முதல் 8:00 மணி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இது தவிர இடைப்பட்ட நேரத்தில் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் நேரக்கட்டுப்பாட்டு முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ