| ADDED : ஜூலை 28, 2024 04:05 AM
காரியாபட்டி, : பஜாரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கொண்டுவரப்பட்ட புறவழிச் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது, செப்டிக் டேங்க் இல்லாமல் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தால் கழிவு நீர் வயல்வெளிகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவது, கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலானதால் சேதமடைந்துள்ள கலையரங்கம் சீரமைக்காதது, இடிந்து விழும் நிலையில் உள்ள விடுதி வார்டன் கட்டடம் உள்ளிட்டவைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.மல்லாங்கிணர் பேரூராட்சில் ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்திற்கு கழிவுநீர் வெளியேற செப்டிக் டேங்க் கட்டாததால், விளை நிலங்களுக்குள் சென்று கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டு விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள வார்டன் குடியிருப்பு சேதமடைந்து விஷ பூச்சிகள் தங்குமிடமாக மாறி உள்ளது.மராமத்து செய்ய பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பட்டியில் உள்ள கலையரங்கம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பஜாரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.500 மீட்டர் தூரத்தை கடக்க அரை மணி நேரம் ஆகிறது. இதற்கு மாற்று தீர்வாக புறவழிச் சாலை ஏற்படுத்த 3 ஆண்டுகளுக்கு முன் திட்ட மதிப்பீடு தயாரித்து அளவீடு செய்யப்பட்டது. இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.