உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனங்கள் எளிதில் செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வாகனங்கள் எளிதில் செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகையாலும், விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவரும் சூழல் இருப்பதாலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கிராமப்புற பகுதிகளில் விவசாயத்தை கடந்து வேறு வேலை வாய்ப்பு இல்லாததால் அப்பகுதி இளைஞர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்காக அருகில் உள்ள தொழில் நகரங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வந்து செல்ல வசதியாக போதிய அளவிற்கு கிராமப்புறங்களில் டவுன் பஸ்கள் இல்லாததால் பெரும்பாலான இளைஞர்கள் டூவீலர்களிலேயே பயணிக்கின்றனர்.இதனால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற நகர் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து, வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் ரோடுகளில் நிறுத்தும் அளவிற்கு நெரிசல் அதிகரித்து உள்ளது.ஒவ்வொரு நகரிலும் பஜார் வீதிகளில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் சொந்த, வாடகை கட்டடங்களில் தொழில் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடை ஊழியர்களும், கடைக்கு வரும் மக்களும் தங்கள் வாகனங்களை நிறுத்த கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.இதில் தற்போதைய இளைஞர்கள் எந்தவித போக்குவரத்து விதிகளையும் கடைபிடிக்காமல் அதிவேகத்தில் டூவீலரில் செல்வது, ஒழுங்கின்றி டூவீலர்களை பஜார் வீதியில் நிறுத்துவது, கடை வாசல்களை மறைத்து டூவீலரில் நிறுத்துவது போன்ற அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.இதனால் பஜார் வீதிகள் வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வந்து செல்வதில் டிரைவர்கள் மிகுந்த தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் ரோட்டில் இருபுறமும் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடன் டிரைவர்கள் பஸ்களை இயக்குகின்றனர்.இதே போல் ஆட்டோ, கார், வேன் போன்ற லோடு வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரோட்டில் தாறுமாறாக தங்களது வாகனங்களை நிறுத்துவதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து கைகாட்டி கோயில் பஜார் வரையிலும் மாநில நெடுஞ்சாலையே வாகன பார்க்கிங் இடம் போல் காணப்படுகிறது. இதே போல் ராஜபாளையத்தில் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து சொக்கர் கோயில் வரையிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. அருப்புக்கோட்டையில் நகரின் அனைத்து ரோடுகளிலும் வாகனங்கள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதே போக்குவரத்து நெருக்கடி நிலைதான் சிவகாசி சாத்தூர், விருதுநகரிலும் பஜார் வீதிகளில் காணப்படுகிறது.எனவே, மாவட்டத்தில் தேசிய, மாநில கிராமப்புற நெடுஞ்சாலைகளில் இரு புறமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி செண்டர் மீடியன் தடுப்புச் சுவர் கட்டி எளிதாக வாகனங்கள் வந்து செல்லும் அளவிற்கு நிலையை ஏற்படுத்த மாவட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை