| ADDED : ஜன 30, 2024 07:18 AM
விருதுநகர் மாவட்டத்தில் டிச. 18, 19ல் பெய்த அதீத கனமழையால் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 884 எக்டேர் சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் 3104 எக்டேரில் 2253 எக்டேர் பாழாகி உள்ளது. 3644 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஜனவரி மாதம் துவக்கத்திலே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டிய நிலையில், பொங்கலுக்கு பிறகு தான் துவங்கப்பட்டன. மேலும் 25 கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்த உத்தரவு வந்தும், தற்போது வரை 4 நிலையங்களில் தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பருவமழை சேதத்தைபோல் கொள்முதல் விலை குறைவாக உள்ளதும் ஒரு காரணமாக உள்ளது. அரசின் குறைந்த பட்ச விலை கிலோவுக்கு ரூ.20. இதன் படி கொள்முதல் நிலையத்தில் கிலோவுக்கு ரூ.23.60க்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.ஆனால் தனியார் வியாபாரிகளிடமோ ரூ.30 வரை கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் நஷ்டத்தில் மிஞ்சியதை கொண்டு லாபம் காண்பதற்காக விவசாயிகளும் வியாபாரிகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க., அரசுதேர்தல் வாக்குறுதி படி நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.மற்ற மாநில அரசுகள் ரூ.28 முதல் 30 வரை வழங்குகிறது. அதே போல் தமிழகத்தில் உயர்த்தினால் விவசாயிகள் லாபமடைவர். தற்போது உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்துவது காலத்தின் கட்டாயம்.வழக்கமாக வெளிமார்க்கெட்டில் ரூ.19 முதல் 20 வரை தான் நெல்கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு ரூ.30 வரை வாங்கப்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பு பற்றாக்குறை தான். மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம், அரசியல் தலையீடு, தெரிந்தவர்களுக்கு காட்டு பாரபட்சம், வாரக்கணக்கில் களத்தில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக விவசாயிகள் வியாபாரிகளை நோக்கி செல்கின்றனர்.சிக்கல்களை கண்டறிந்து அரசு தீர்க்க வேண்டும். இல்லையெனில் மாவட்டத்திற்கு 25 கொள்முதல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டாலும் பயனேதும் இல்லாத சூழல் தான் நீடிக்க வாய்ப்புள்ளது.