| ADDED : டிச 30, 2025 06:05 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டு புதிய இன்ஸ்பெக்டர் பதவி உருவாக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் 90 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. இதற்குட்பட்டு பந்தல்குடி, சேதுராஜபுரம், பெரிய தும்ம குண்டு, ஆமணக்குநத்தம், கல்லுப்பட்டி குருந்தமடம், பெரியநாயகிபுரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டகிராமங்கள் உள்ளன. ஸ்டேஷன் கட்டடம் கட்டி 100 ஆண்டுகள் ஆகி விட்டது. போதுமான இட வசதி இல்லாததால் பணிபுரியும் அதிகாரிகள் புகார் கொடுக்க வரும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு புதிய இன்ஸ்பெக்டர் பணி உருவாக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு சட்ட சபை கூட்டத்தில் புதிய கட்டடம் கட்ட 2.38 கோடி நிதி ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித பணியும் நடக்கவில்லை. இன்ஸ்பெக்டருக்கு ஜீப் வசதி இல்லை. தற்போது உள்ள கட்டடடத்தில் இன்ஸ்பெக்டருக்கு என தனி ரூம் இல்லை. இட பற்றாக்குறையால் போலீசார்கள் திண்டாடி வருகின்றனர். போதுமான போலீசார்களும் பணி நியமனம் செய்யப்படவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கு நிதியை உடனடியாக ஒதுக்கி பணிகளை துவங்கவும் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.