| ADDED : நவ 25, 2025 03:56 AM
நரிக்குடி: ரேஷன் பொருள் வாங்க 2 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை, படுமோசமான ரோடு, சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளியை நாடும் கொடுமை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி நரிக்குடி இசலி ஊராட்சி மக்கள் தவிக்கின்றனர். நரிக்குடி இசலி ஊராட்சியில் குமிழாங்குளம்,இனக்கனேரி உள்ளன. இசலியிலிருந்து திருச்சுழி செல்லும் ரோடு படு மோசமாக உள்ளது. கால்வாய் துார்வாராமல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. மழை நேரங்களில் மழை நீர் செல்ல வழியின்றி உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறுகிறது. விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த சமுதாயக்கூடம் இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது. சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை நாடுகின்றனர். பெரும்பாலான வீதிகள் சேறும் சகதியுமாக உள்ளன. குமிழாங்குளத்தில் கண்மாய் கரையில் மெயின் ரோடு உள்ளது. மழை நேரங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. சமுதாயக்கூடம் கிடையாது. வீதிகள் சேறும் சக்தியுமாக உள்ளன. இனக்கனேரி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க இசலிக்கு 2 கி.மீ., தூரம் நடந்து சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. வயதானவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. வெயில், மழைக்கு பாதிக்கப்படுகின்றனர். வாறுகால் வசதி கிடையாது. வீதிகளில் கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.