| ADDED : ஜன 13, 2024 05:00 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் முகவூர் டாஸ்மாக் கடையில் வாங்கிய பிராந்தி பாட்டிலில் பூச்சி போன்ற பொருள் கிடந்ததால் டெய்லருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், மது உற்பத்தி நிறுவனம் , விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு மாநில நலநிதி கணக்கிற்கு ரூ.5 லட்சம் செலுத்தவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மாங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன், டெய்லர். இவர் 2021 செப்.9 ல் விருதுநகர் மாவட்டம் முகவூர் டாஸ்மாக் கடையில் 180 மில்லி பிராந்தி ரூ.120க்கு வாங்கியுள்ளார். வீட்டில் சென்று பார்த்த போது பிராந்தி பாட்டிலில் பூச்சி போன்ற பொருள் மிதந்துள்ளது. இதனை மாற்றி தரக் கோரி மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் திரும்ப கேட்டபோது, ஊழியர்கள் மாற்றி தரவில்லை.பாதிக்கப்பட்ட மணிகண்டன், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.இதில் மணிகண்டனுக்கு மதுபாட்டிலுக்குரிய ரூ.120 ஐ திரும்ப வழங்கவும், இழப்பீடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் வழங்கவும், மது உற்பத்தி நிறுவனம்,விருதுநகர் டாஸ்மாக் நிறுவனம் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ தமிழ்நாடு மாநில நல நிதி கணக்கிற்கு ரூ.5 லட்சம் செலுத்தவும் உத்தரவிட்டனர்.