| ADDED : ஜன 14, 2024 12:41 AM
ராஜபாளையம்:''விஷ வாயுதாக்கி உயிரிழப்பு ஏற்படுவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை'' என தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: 1993 முதல் 2023 வரை பாதாள சாக்கடையில் சிக்கி விஷவாயு தாக்கி 228 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தொழில் முதலீடு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமையாக கூறும் நிலையில், இது போன்ற துயரங்கள் நிகழ்வது வருத்தத்திற்குரியது.பாதாள சாக்கடை மற்றும் மலக்குழிக்குள் மனிதர்கள் நேரடியாக இறங்க கூடாது என தமிழக அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை, மாநில அரசு ஆகியவை வெவ்வேறு ஊதியங்களை நிர்ணயத்துள்ளது. இவற்றில் எது உயர்வோ அதை வழங்க வேண்டும், என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இதில் எது குறைவோ அதை வழங்க வேண்டும், என அரசாணை வெளியிட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும்.அதேபோல் 2022ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் நிரந்தர துாய்மை பணியாளர் பணியிடங்களை நீக்கிவிட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளது. இதனால் பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இயந்திரங்கள் இல்லை
ஒப்பந்த பணிகளில் குறைவான ஊதியம் வழங்கப்படுவதால் இது போன்ற ஆபத்தான பணிகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். பல நகராட்சிகள் பாதாள சாக்கடைகளை துாய்மை செய்வதற்கான இயந்திரங்கள் இல்லை. இதற்கு தமிழக அரசு தனி நிதி ஒதுக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் நகராட்சிக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. ஒப்பந்ததாரர் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் அதிகாரிகளையும் பொறுப்பாளராக சேர்க்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளேன் என்றார்.