உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட எதிர்பார்ப்பு

சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட எதிர்பார்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, மிளா, காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இவற்றை ஒட்டி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சேத்துார், தேவதானம் பகுதி விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. இதேபோல் நரிக்குடி அருப்புக்கோட்டை உள்ளிட்ட வறட்சி பகுதியில் உள்ள சீமை கருவேல மரக்காடுகளில் பதுங்கி உள்ள புள்ளி மான்கள், காட்டு பன்றிகள் அருகாமை விவசாய பகுதியில் விளைந்துள்ள மிளகாய், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. வனத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவைகளை சமீப காலமாக காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து 50 ஆண்டுகள் பலன் தந்த பலா மரங்கள் முதல் தென்னை மரங்களை உடைத்தும் குருத்துகளை பிடுங்கியும் சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து அரசுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க விண்ணப்பித்தால் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். கூட்டமாக சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்தி விளை நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் முறையிடுகின்றனர். சோலார் வேலி அமைக்க ஏற்படும் அதிக செலவு இவற்றுக்கு தடையாக உள்ளதுடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள குறிப்பிட்ட துாரத்திற்குள் சோலார் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்குகளின் நுழைவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது.இவற்றுக்கு தீர்வாக வேளாண்துறை மூலம் மானிய விலையில் வேலி அமைக்க ஒதுக்கீடு செய்வதுடன், வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கி வேலி அமைக்க ஒப்புதல் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிப்பிற்கு உள்ளாகும் விவசாயிகளும் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை