| ADDED : ஜன 19, 2024 04:19 AM
விருதுநகர்: விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இடியும் நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்படும் அலுவலகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு இடமளிக்க வேண்டுமென ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறையின் அலுவலகங்களும் ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக உள்ளது. இதில் சுகாதாரத்துறை, முதன்மைக்கல்வி, புள்ளியல், கைத்தறி, குழந்தை, பெண்களுக்கான குடும்பநலத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் ஒரே கட்டடத்தில் செயல்படுகிறது.இந்த கட்டடம் மிகவும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் புனரமைப்பு செய்து பயன்படுத்துகின்றனர். மேலும் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி முடித்தவுடன் அலுவலகங்கள் இடம் மாறி விடும் என துறை அலுவலர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.புதிய கலெக்டர் அலுகத்தில் அனைத்து அலுவலகங்களையும் மாற்ற இயலாது, திறப்புவிழா முடிந்தவுடன் சுகாதாரத்துறை அலுவலகத்தை தற்போது உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றி பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகள் படுமோசமான கட்டடத்தில் உயிர் பயத்தில் வேலை செய்தோம். தற்போதாவது புதிய கட்டடத்தில் அலுவலகத்தில் இடம் ஒதுக்க வேண்டுமென் அத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.