| ADDED : நவ 28, 2025 07:59 AM
காரியாபட்டி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். காரியாபட்டியில் நடந்த இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில் சிறு தொழில், உணவு பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, அழகுக் கலை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பெண்கள் தங்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களும் உயிர் பெற்றவை. நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புறங்களுக்கும் வர வேண்டும். அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மகளிர் கை வசப்பட வேண்டும். நமக்கான வேலை முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஆரம்ப கால பயிற்சிதான். அடுத்த கட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும். இப்பயிற்சிகளை பெறு வதன் மூலம் மகளிர் பொருளாதாரத்தில் உயர முடியும், என்றார்.